அமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின்..! 

Udhayanidhi Stalin

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக ஆளுநர் மாளிகையில் பதவியேற்றார். 

இளைஞரணி செயலாளர் உதயநிதி

தமிழ் திரையுலகில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் என பல பரிணாமங்களை கொண்ட உதயநிதி ஸ்டாலின், கலைஞர் கருணாநிதியின் பேரன், மு.க.ஸ்டாலினின் மகன் என்பதற்காகவே பல வசதிகளையும் அதே நேரத்தில் பல விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் இருக்கும் வரை நேரடி அரசியலில் இறங்காமல் இருந்த உதயநிதிக்கு, அவர் மறைந்த பிறகு 2019ம் ஆண்டு திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அப்போதே அது எதிர்க்கட்சியினரால் விமர்சனம் செய்யப்பட்டது. ஸ்டாலினுக்கு பிறகு திமுக தலைவராக உதயநிதி தான் வர முடியும் என்பதற்காகவே அவருக்கு இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்தனர். 

2019 தேர்தல் பரப்புரை

ஆனால் இந்த விமர்சனங்களை குறித்து கவலை கொள்ளாத உதயநிதி, தனது அரசியலில் இளைஞரணி செயலாளராக தனது பணிகளை செய்து வந்தார். பின்னர் 2019 மக்களவை தேர்தலுக்காக திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக்கட்சி வேட்பாளர்களுக்காவும், அனைத்து தொகுதிகளுக்கும் சென்று வாக்கு சேகரித்தார். உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக நேரடி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டது அதுதான் முதல்முறை. 

சேப்பாக்கம் தொகுதி வேட்பாளர்

2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாட்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில் சேப்பாக்கம் தொகுதி வேட்பாளாராக உதயநிதி ஸ்டாலின் திமுக சார்பில் நிறுத்தப்பட்டார். இதனால் திமுக வாரிசு அரசியல் செய்வதாக அதிமுக, பாஜக, பாமக போன்ற எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தனர். இந்த தேர்தலிலும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் செங்கல் மட்டுமே உள்ளது என செங்கலில் AIIMS என எழுதி இவர் செய்த பரப்புரை திமுகவினரை மட்டும் இல்லாமல் எதிர்க்கட்சியினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த தேர்தலில் திமுக வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்தது. திமுக வெற்றி பெற்றது முதலே அமைச்சர் பதவி சர்ச்சை உதயநிதியை சுற்றி வந்துகொண்டிருக்கிறது. ஆட்சிப்பொறுப்பேற்கும் போதே உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என திமுக தொண்டர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அவருக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லை. 

அதைத்தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பின்போதும், நேர்காணல்களின்போது, உதயநிதியிடம் அமைச்சர் பதவி குறித்த கேள்வி கேட்கப்படும்போதெல்லாம், தொகுதி வேலையை பார்ப்பதற்கே நேரம் போதவில்லை என மழுப்பலான பதிலை கூறி வந்தார். இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாகவும் அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படவுள்ளது என்ற செய்திகள் பரவியது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள திமுக மாவட்ட கழகங்களில் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது, தீர்மானங்கள் நிறைவேற்றி தலைமைக்கு நெருக்கடி தர வேண்டாம் என உதயநிதி கூறியதால், அந்த நேரத்தில் அமைச்சர் பதவி சர்ச்சை முடிவுக்கு வந்தது. 

அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியானது. அதன்படி இன்று (14-12-2022) காலை 9:30 மணியளவில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சராகவும் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். 

ஸ்டாலினிடம் ஆசி

அமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன்பு, ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இல்லத்திற்கு சென்று, அவரிடமும் அவரது தாயிடமும் ஆசி வாங்கினார். 

கலைஞர் நினைவிடத்தில் மரியாதை 

அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கலைஞர் மற்றும் அண்ணா நினைவிடங்களுக்கு சென்ற உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.