பொது சிவில் சட்டம்.. நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு.!

ucc

நாடாளுமன்ற நிலைக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் பொது சிவில் சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். 

பொது சிவில் சட்டம் பற்றி பிரதமர்

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், பொது சிவில் சட்டத்தை கொண்டுவர பாஜக அரசு முயன்று வருகிறது. நாட்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படுவது அவசியம் என்ற கருத்தை பிரதமர் மோடி முன்வைத்து வருகிறார். பொது சிவில் பற்றி அவர் பேசியதாவது, "இரண்டு விதமான சட்டங்களால் நாட்டு நிர்வாகத்தை நடத்த முடியாது. நாட்டு மக்கள் அனைவரும் சமம் என அரசியல் சாசனம் சொல்வதால், நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியமே. ஆனாலும், பொது சிவில் சட்ட விவகாரத்தில் சிலர் தவறான கருத்துகளை பரப்பி, மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்" என்று தெரிவித்திருந்தார்.

விளக்கம் பெற அழைப்பு

பிரதமரின் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் வந்தது. இந்தநிலையில், பொது சிவில் சட்ட விவகாரம் குறித்து சட்டம் மற்றும் பணியாளர் விவகாரங்கள் மீதான நாடாளுமன்ற நிலைக் குழுவானது, மத்திய அரசின் சட்ட ஆணையம் மற்றும் சட்ட அமைச்சக பிரதிநிதிகளிடம் விளக்கம் பெற உள்ளது. இதற்காக இன்றைய தினம் ஜூலை 03 தங்கள் முன்பு நேரில் ஆஜராகும்படியும் அவர்களுக்கு அழைப்பு அனுப்பியிருந்தது.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

இந்த அழைப்பின்படி, சட்ட ஆணையம் மற்றும் சட்ட அமைச்சக பிரதிநிதிகள், பொது சிவில் சட்டம் தொடர்பான அறிக்கை விபரங்களை நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் இன்று தெரிவித்தனர். அதன்படி நடந்த நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் நடந்த பொதுசிவில் சட்டம் தொடர்பான ஆலோசனையில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். 

ஆலோசனை கூட்டத்தில், தற்போதைய நிலையில் விவாதமே தேவையில்லை என்றும், பொதுசிவில் சட்ட விவகாரத்தில் பல்வேறு விளக்கங்கள் தேவைப்படுகின்றன என்றும் தேர்தலுக்கு 300 நாட்களே இருக்கும் நிலையில் பொதுசிவில் சட்டத்தில் அவசரம் ஏன்? என்றும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.