பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டம்.. நாராயணன் திருப்பதி கண்டனம்.!

naryn

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்ததையடுத்து, தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்திருக்கிறார். 

கைவிடப்பட்ட முயற்சி மீண்டும் ஏன்?

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் அறிவித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கடந்த தி மு க ஆட்சியிலும் இதே போன்றதொரு முயற்சியை எடுத்து தமிழக பல்கலைக்கழகங்களை ஒரே சட்ட முன்வடிவின் கீழ் கொண்டு வர முயற்சி எடுக்கப்பட்டு, பல்வேறு காரணங்களால் அம்முயற்சி கைவிடப்பட்ட நிலையில், தற்போதைய அறிவிப்பானது கைவிடப்பட்ட அந்த முயற்சியை மீண்டும் கொண்டுவரும் உள்நோக்கத்தோடு கூடிய அறிவிப்பே இது.

பிற்போக்குத்தனமான திட்டம்

ஒரே மாதிரியான பாடத்திட்டம் என்பது, சமச்சீர் கல்வித்திட்டத்தை கல்லூரிகளில் புகுத்தும் பிற்போக்குத்தனமான திட்டம். ஏற்கனவே சீர்கெட்டு கொண்டிருக்கும் தமிழக அரசு பல்கலைக்கழங்கள் மற்றும் அரசு கல்லூரிகளின் கல்வித்  தரத்தை வெகுவாக குறைப்பதோடு, மாணவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். 

தனித்துவத்தை சிதைக்கும்

தமிழகத்தின் பல்கலைக்கழகங்கள் ஒவ்வொன்றின்  பாடத்திட்டங்களும் தனித்துவம் பெற்றவை என்பதோடு, தங்களுக்கேயுரிய பாணியில் அகில இந்திய போட்டித்  தேர்வுகள், மத்திய, மாநில அரசு பணிகளுக்கு தேவையான பாடங்கள், பயிற்சி உட்பட  கல்விப்பணி மற்றும் மேல்படிப்புகளுக்கான அத்தியாவசிய பாடங்கள் ஆகியவற்றை கொண்டிருக்கும் நிலையில், பொதுவான பாடத்திட்டங்கள் என்ற அறிக்கை, அவற்றின் தனித்துவத்தை, நோக்கத்தை, உன்னதத்தை சிதைக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

மாணவர்களின் பொது அறிவு பாதிக்கும்

கடந்த ஆண்டே இதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது, பிற மாநில, மத்திய அரசு பணிகளுக்கு தேவையான பாடத்திட்டங்களோ, அலகுகளோ, அலகுகளின் உள்ளடக்கமோ இல்லாமல் பொது பாடத்திட்டங்கள் உள்ளன என்றும், இதனால் மாணவர்களின் பொது அறிவு மற்றும் திறன் மேம்பாடு பாதிக்கும் எனவும் அனைத்து பல்கலைக்கழங்களின் பாடதிட்டக் குழுக்களும் கடுமையாக ஆட்சேபம் தெரிவித்திருந்தன. 

பாடத்திட்டங்கள் அனைத்தும் ஒரேவிதமாக இருந்தால்..

கல்வி பொதுப்பட்டியலில் உள்ள நிலையில், உயர்கல்வி நிறுவனங்கள் மத்திய அரசின் யுஜிசி போன்ற அமைப்புகளின் வழிகாட்டுதல்கள்படி செயல்பட வேண்டிய நிலையில், அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு ஒரே பாடதிட்டவரைவு என்பது பற்பல சிக்கல்களை ஏற்படுத்தும். உதாரணமாக, தேசிய தரமதிப்பீட்டுக்குழுவின் (NAAC ) விதிமுறைகளின்படி மூன்று ஆண்டுகளுக்கொரு முறையாவது குறைந்தபட்சம் 30% பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படவேண்டும், ஒவ்வொரு கல்விநிறுவனமும் தனித்தனியேதான் மதிப்பிடப்படமுடியும். இவ்வாறு இருக்க, பாடத்திட்டங்கள் அனைத்தும் ஒரேவிதமாக இருந்தால், எவ்வாறு தேசிய தரமதிப்பீட்டில் பங்குபெற்று, உயர்மதிப்பெண்கள் பெற்று, அதனடிப்படையில் பல்வேறு நிதி ஆய்வுத் தொகைகளை பெற இயலும்?

மலிவான அரசியலை திமுக அரசு கைவிட வேண்டும்

ஆகவே, உயர் கல்வியில் தொடர்ந்து குழப்பம் விளைவிப்பதை தவிர்த்து, பல்கலைக்கழங்களை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் எண்ணத்தை, உள்நோக்கத்தை, மலிவான அரசியலை,  மாணவர்களின் நலன் கருதி தி மு க அரசு கைவிட வேண்டும். இல்லையேல் தமிழ் மாணவர்களின் கல்வித்தரம் குறைந்து மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.