போலீசாரின் அத்துமீறலால் கால்களை இழந்த நடைமேடை வியாபாரி! 

Kanpur vendor

உத்தரபிரதேச மாநிலத்தில் போலீசாரின் அத்துமீறலால் நடைமேடை வியாபாரி ஒருவர் தனது இரண்டு கால்களையும் இழந்த விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

நடந்தது என்ன?

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இரயில் நிலையம் அருகே வியாபாரிகள் நடைமேடையில் காய்கறிகள், பழங்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் ஆகியவற்றை  விற்று அதில் கிடைக்கும் குறைந்த வருமானத்தில் வாழ்ந்துவருகின்றனர். இந்நிலையில் நேற்று கான்பூர் ரயில்நிலையம் வந்த, கான்பூர் காவல்நிலைய தலைமைக் காவலர் ராகேஷ் குமார், நடைமேடையில் கடை விரித்து காய்கறிகளை விற்றுக்கொண்டிருந்த வியாபாரிகளை அங்கிருந்து கிளம்பும்படி கூறியுள்ளார்.

இதனால் அங்கிருந்த வியாபாரிகளுக்கும் காவலர் ராகேஷ் குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே, ராகேஷ் குமார் அங்கு கடை வைத்திருந்த அர்ஷலான் என்பவரின் காய்கறிகளையும், எடை பார்க்கும் இயந்திரத்தையும் தூக்கி வீசியுள்ளார். இதில் எடை பார்க்கும் இயந்திரம் ரயில் தண்டவாளத்தில் விழுந்துள்ளது. தண்டவாளத்தில் விழுந்த எடை பார்க்கும் இயந்திரத்தை எடுப்பதற்காக அர்ஷலான் சென்றுள்ளார். அப்போது எதிர்பாரத விதமாக வந்த ரயில் அர்ஷலான் மீது மோதியுள்ளது. இந்த கொடூர விபத்தில் தூக்கி அர்ஷலான் தனது இரு கால்களையும் இழந்து, உயிருக்காக போராடி தண்டாவாளத்தில் கிடந்துள்ளார். 

வீடியோ வைரல்

தலைமைக் காவலர் ராகேஷ் குமாருக்கும், வியாபாரி அர்ஷலானுக்கும் இடையே நடந்த வாக்குவாதம், காய்கறிகளை ராகேஷ் குமார் தூக்கி வீசியது மற்றும் ரயிலில் அர்ஷலான் அடிபட்டது என அனைத்தையும் அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர். இதில் சிலர் இந்த வீடியோவை சமூக வலைதளத்திலும் பகிர்ந்துள்ளனர். மேலும் தண்டவாளத்தில் உயிருக்காக போராட்டிக்கொண்டிருந்த அர்ஷலானை இரண்டு ரயில்வே போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அர்ஷலானை இரண்டு காவலர்கள் தூக்கிச் செல்லும் வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  மேலும் கான்பூர் இந்திரா நகர் காவல்நிலையத்தை சேர்ந்த காவலர்கள் நடைமேடை வியாபாரிகளிடமிருந்து தினமும் 50 ரூபாய் லஞ்சமாக வாங்குகிறார்கள் எனவும் கூறப்படுகிறது.

   

காவலர் ‘சஸ்பெண்ட்’ 

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கான்பூர் காவல்நிலைய உயரதிகாரி ஒருவர், இரயில்நிலையம் அருகே நடந்த சம்பவம் குறித்து நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார். மேலும் தலைமைக் காவலர் ராகேஷ் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். 

தலைமைக் காவலர் ஒருவரின் அத்துமீறலால் சாதரண காய்கறி வியாபாரி ஒருவரின் எதிர்காலம் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.