வேங்கைவயல் விவகாரம் - முதலமைச்சர் பதில்

dgdch

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்திருக்கிறார்.

மலம் கலந்த விவகாரம்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் மலம் கலந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

சிபிசிஐடி விசாரணை

இந்த சம்பவம் பூதாகரமெடுத்தநிலையில், இதுதொடர்பான வழக்கு சிபிசிஐடி போலிசார் வசம் சென்றது. சிபிசிஐடி போலிசார் 147 பேரிடம் விசாரணை நடத்தி, இறுதியாக 11 பேர் மீது இறுதிகட்ட விசாரணையை மேற்கொண்டது. மேலும், மலம் கலந்து குடிநீர் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பினர். 

மாதிரிகளையும், 11 பேரின் டிஎன்ஏ பரிசோதனையும் பெறப்பட்டு இரண்டையும் ஒப்பிட கோரிய சிபிசிஐடி போலீசாரின் வேண்டுகோளுக்கு, புதுக்கோட்டை நீதிமன்றமும் அனுமதி அளித்துள்ளது. மாதிரிகள் ஒப்பிட்டு பார்ப்பதற்காக தஞ்சாவூர் அல்லது சென்னை ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன்பின் குற்றவாளிகள் யார் என்பது தெளிவாகும் என கூறப்படுகிறது.

முதலமைச்சர் பதில்

இந்தநிலையில், இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் வேங்கைவயல் கிராமத்தில் தீண்டாமை அகற்றப்பட்டிருக்கிறது மேலும், அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று முதலமைச்சர் பதில் அளித்திருக்கிறார். மேலும், குடிநீரில் மனிதக்கழிவு கலந்த குற்றவாளிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.