வேங்கைவயல் விவகாரம்.. 8 பேர் ரத்த மாதிரி தர மறுப்பு.. இனி அந்த 8 பேரிடம் கோணத்தை திருப்புமா சிபிசிஐடி? 

vengaivayal

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் மலம் கலந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

11 பேர் மீது விசாரணை

இந்த சம்பவம் பூதாகரமெடுத்தநிலையில், இதுதொடர்பான வழக்கு சிபிசிஐடி போலிசார் வசம் சென்றது. சிபிசிஐடி போலிசார் 147 பேரிடம் விசாரணை நடத்தி, இறுதியாக 11 பேர் மீது இறுதிகட்ட விசாரணையை மேற்கொண்டது. மேலும், மலம் கலந்து குடிநீர் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பினர். 

மாதிரிகளையும், 11 பேரின் டிஎன்ஏ பரிசோதனையும் பெறப்பட்டு இரண்டையும் ஒப்பிட கோரிய சிபிசிஐடி போலீசாரின் வேண்டுகோளுக்கு, புதுக்கோட்டை நீதிமன்றமும் அனுமதி அளித்தது. மாதிரிகள் ஒப்பிட்டு பார்ப்பதற்காக தஞ்சாவூர் அல்லது சென்னை ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன்பின் குற்றவாளிகள் யார் என்பது தெளிவாகும் என தெரிவிக்கப்பட்டது.

8 பேர் வர மறுப்பு

11 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபனு சோதனை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, 11 பேர் பரிசோதனைக்கு ஆஜராக சிபிசிஐடி உத்தரவிட்டது. இந்தநிலையில், ரத்த பரிசோதனைக்கு 3 பேர் மட்டுமே வருகை தந்துள்ளனர். காவலர் முரளிராஜா, குடிநீர் தொட்டியின் ஆப்ரேட்டர் காசி, முன்னாள் ஊராட்சித் தலைவர் முத்தையா உள்ளிட்ட மூவர் மட்டுமே வந்துள்ளனர். மீதமுள்ள 8 பேர் இன்று எடுக்கப்படும் ரத்த மாதிரி ஆய்வுக்கு வருகை தரவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த தகவல், குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் இந்த 8 பேர்களுக்கு தொடர்பிருக்குமா என்ற கோணத்தில் சிபிசிஐடி பார்க்கும் என்று பார்க்கப்படுகிறது.

தற்போது எடுக்கப்படும் ரத்த மாதிரி சோதனை சிபிசிஐடி போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, புதுக்கோட்டை வன்கொடுமை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலிசார் ஒப்படைப்பார்கள். பின்னர், அது புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, சென்னையில் உள்ள தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இந்த ஆய்வுக்கான முடிவு தெரிவதற்கு இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆகும் என்று சிபிசிஐடி மற்றும் மருத்துவ துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்திருந்தநிலையில், விரைவில் குற்றவாளிகள் யார் என்பதை இன்னும் ஒருசில மாதங்களில் தெரியவரும் என்று பார்க்கப்படுகிறது.