கூட்டணியில்தான் இருக்கோம்.. தலைவர் பதவியை ராஜினாமா செய்வாரா அண்ணாமலை.!

website post (66)

அதிமுக பாஜக கூட்டணி உரசல்

கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் சூழல் பரபரப்பாகவே இருந்து வருகிறது. ஆளும் கட்சி தொடர்பான செய்திகள் மக்கள் மத்தியில் சென்றடைவதைவிட, பாஜக ஹனிடிராப் அரசியல் மற்றும் அதிமுக-பாஜக கூட்டணி மோதல் என மக்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரங்களிலும் தினம்தினம் தலைப்புச் செய்தியாக இருந்து வருகிறது. அதிமுக பாஜக கூட்டணி மோதல் தற்போது வரை பேசுபொருளாக இருந்து வருகிறது. 

பாஜகவின் தொழில்நுட்ப பிரிவின் மாநில தலைவராக இருந்த சி.டி. நிர்மல் குமார் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்ததையடுத்து, அதிமுக-பாஜக கூட்டணி முறியத் தொடங்கியது. எடப்பாடி பழனிசாமி கூட்டணி தர்மத்தை மீறிவிட்டார் என்று பாஜகவைச் சேர்ந்தவர்கள் எடப்பாடியின் உருவ பொம்மை எரிப்பு, அதிமுக எம்.எல்.ஏ.க்களை தூக்குவோம் என்று பேசியது என கூட்டணி முறிவதற்கான செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தனர். அதேபோல், அதிமுகவினரும் பாஜகவை விமர்சனம் செய்து வந்தனர்.

ராஜினாமா செய்ய தயார்

இதனைத்தொடர்ந்து, பாஜக தலைவர் அண்ணாமலை கூட்டணி தொடர்பாக பொதுவெளியில் தடாலடியாக பேசி வந்தார். தமிழகத்தில் திராவிட கட்சிகள் இல்லாமல் தனித்து போட்டியிட்டால் தான் பாஜக வளரும் எனவும் கூட்டணி வைத்தால் எனது பதவியை ராஜினாமா செய்ய தயார் என்றும் பேசியிருந்தார். மேலும், கூட்டணிக் கட்சித்தலைவர்கள் பாஜக வளர்ந்து வருவதை விரும்பவில்லை. யாரும் அவர்கள் கட்சியை வளர்க்க நினைப்பார்கள். கூட்டணி கட்சியை வளர்க்க நினைக்க மாட்டார்கள். பாஜக-வை வளர்க்க வேண்டும் என்று நினைக்க மாட்டாங்க. நானும் இங்கிருந்து கொண்டு கூட்டணி கட்சியை வளர்க்கனும் என்று நினைக்க மாட்னே். இங்கிருந்து இன்னொரு கட்சியை வளர்க்க வேண்டும் என்று நினைத்தால் நான் முட்டாள். அரசியலைப் பொறுத்தவரை என்னுடைய தீர்க்கமான நம்பிக்கை நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.  

மேலும், தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டு குனிந்து செல்ல விரும்பவில்லை என்றும், பாஜக-வை வலுப்படுத்த வேண்டும், கட்சி வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பேசினார். மேலும், கூட்டணிக்காக இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு யாருக்கும் சலாம் போட மாட்டேன் என்றும், மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன் என்று பேசியிருந்தார். 

அதிமுகவுடன் கூட்டணி வைத்து இருக்கிறோம்

இந்தநிலையில் நேற்றைய தினம் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிமுக பாஜக கூட்டணி பற்றி அறிவிப்பு செய்தார். இந்த அறிவிப்பால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கதிகலங்கி போயிருக்கிறார். உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது; தமிழ்நாட்டில் பாஜக முழு வலிமை இன்றி உள்ளது. பாஜகவை வலுப்படுத்துவதற்கான பணிகளை செய்து வருகிறோம். பாஜகவின் பூத் கமிட்டியை வலுப்படுத்த பணிகளை செய்து வருகிறோம். அதில் குறிப்பிடத்தக்க அளவில் நாங்கள் முன்னேற்றமும் அடைந்து இருக்கிறோம். நாங்கள் தொலைதூர கிராமங்களில் இருக்கும் வாக்குசாவடிகளை கூட அடைந்து இருக்கிறோம். எங்கெல்லாம் பாஜக வலிமை இல்லாமல் இருந்ததோ அங்கெல்லாம் நாங்கள் சென்று சேர்ந்து இருக்கிறோம். நாங்கள் வலிமை இன்றி இருக்கும் இடங்களில் எங்களுக்கு கூட்டணி கட்சிகள் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். தமிழ்நாட்டில் நாங்கள் கூட்டணியில்தான் இருக்கிறோம். தமிழ்நாட்டில் நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்து இருக்கிறோம், என்று அமித் ஷா பேசியுள்ளார். 

பாஜக கூட்டணியில்தான் அதிமுக உள்ளது

உள்துறை அமைச்சர் கூட்டணி பற்றி உறுதிபடுத்தியதையடுத்து இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியும் பாஜக கூட்டணியில்தான் அதிமுக உள்ளது என்று பேட்டி அளித்திருக்கிறார். அவர் சொன்னதாவது; பாஜக கூட்டணியில்தான் அதிமுக உள்ளது, இதைதான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறோம். நாடாளுமன்ற தேர்தலுக்கும் அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என்று தெரிவித்தார்.

ராஜினாமா செய்வாரா

கூட்டணி பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் எடப்பாடி பழனிசாமியும் உறுதியளித்தநிலையில், அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பாஜக தலைவர் பதவியில் இருந்தே ராஜினாமா செய்வேன் என்று பேசியிருந்த அண்ணாமலையின் பேச்சுக்கள் தற்போது கவனம் பெற்றிருக்கின்றன. அதிமுக பாஜக கூட்டணி உறுதியானதையடுத்து அண்ணாமலை தலைவர் பதிவியை ராஜினாமா செய்துவிட்டு, சாதாரண தொண்டனாக செயல்படுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.