பீக் ஹவர்ஸ் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் - இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் 

thiruppur

7 லட்சம் தொழிலாளர்கள்

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான பீக் ஹவர்ஸ் கட்டணம் மற்றும் நிலை கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி திருப்பூர் தொழில் துறையினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த சிறு , குறு என 25,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றனர், இந்த நிறுவனங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும்  7 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். வருடம் தோறும் 60 ஆயிரம் கோடி வரை அந்நிய செலவாணியை ஈட்டுத்தரும் அளவிற்கு பின்னலாடை துறையில் திருப்பூர் அபார வளர்ச்சி அடைந்துள்ளது. 

நடவடிக்கை எடுக்கவில்லை

இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புதிதாக மின்வாரியத் துறை சார்பில் அமல்படுத்தப்பட்ட பீக் ஹவர்ஸ் மற்றும் நிலை கட்டணம் தொழில்துறையினரை மிகப்பெரும் அளவில் பாதிப்படைய செய்திருப்பதாகவும் , அதனை திரும்ப பெற வலியுறுத்தி ஒன்பது மாத காலமாக பல்வேறு கட்ட போராட்டங்கள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோரை சந்தித்து வலியுறுத்தியும் , இதுவரை எந்த நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 

மாபெரும் அடையாள வேலை நிறுத்தம்

எனவே தொழில்துறையை பாதுகாக்கக்கூடிய வகையில் பீக் ஹவர்ஸ் மற்றும் நிலை கட்டணம் ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும் என மின்வாரியம் மற்றும் அரசின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில்  வரும் திங்கட்கிழமை 25ஆம் தேதி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற உள்ளதாக திருப்பூர் தொழிலாளர் நலத்துறை சங்கத்தில் தலைவர் முத்துரத்தினம் கூறியுள்ளார். இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் திருப்பூரில் உள்ள 15000 நிறுவனங்களும் மற்றும் அதில் பணியாற்றும் 7 லட்சம் பாதிக்கப்படுகின்றனர், மேலும் 300 கோடி முதல் 500 கோடி வரை உற்பத்தி பாதிக்கப்படும், இதனால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.