நாடாளுமன்ற கூட்டுக் குழு என்றால் என்ன? அதன் செயல்பாடுகள் என்ன?

bcvbnm

நாடாளுமன்ற கூட்டுக் குழு என்றால் என்ன?

நாடாளுமன்ற கூட்டுக் குழு ( Joint Parliamentary Committee) இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு தற்காலிக குழுவாகும். தற்காலிகமாக அமைக்கப்படும் நாடாளுமன்றக் கூட்டுக் குழு, இந்திய அரசின் துறைகளில் நடைபெற்ற நிதி முறைகேடுகள் குறித்து விரிவாக விசாரித்து நாடாளுமன்றத்திற்கு அறிக்கை அளிக்கும்.

குழுவின் அமைப்பு

இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவைத் தலைவர்கள் கலந்து பேசி, நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்படும். நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்ப்பினர்கள் விட மக்களவை உறுப்பினர்கள் இரண்டு மடங்காக இருப்பர். இக்கூட்டுக் குழுவிற்கு ஒரு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

அதிகாரங்கள்

* இந்தியாவின் அரசுத் துறை அல்லது துறைகளில் பெருமளவில் நஷ்டம், ஊழல்கள் மற்றும் கொள்கை முடிகளை மீறிய செயல்களை கண்டு ஆராய்ந்து முடிவு எடுப்பதற்கு அவ்வப்போது கூட்டப்படும் நாடாளுமன்றக் கூட்டுக் குழு, தொடர்புடைய துறைகளின் வல்லுநர்கள், பொது அமைப்புகள், தனிநபர்கள் ஆகியவர்களை அழைத்து கருத்துகள் பெறவும், விசாரணை நடத்தவும் அதிகாரம் கொண்டது.

* நாடாளுமன்றக் கூட்டுக் குழுவானது பொதுவாக மத்திய அமைச்சர்களை சாட்சியம் கூற அழைக்காது. இருப்பினும், பங்குப் பத்திரங்கள் மற்றும் வங்கி நடவடிக்கைகள் தொடர்பான முறைகேடுகளில், மத்திய அமைச்சர்களை விசாரிக்க வேண்டுமெனில், மக்களவைத் தலைவரின் முன் அனுமதியுடன், மத்திய நிதி அமைச்சரை நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரிக்கலாம்.

* அரசின் பாதுகாப்பு நலன் கருதி, ஆவணங்களை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிற்கு வழங்க மறுக்க, இந்திய நடுவண் அரசுக்கு அதிகாரம் உள்ளது. 

* நாடாளுமன்றக் கூட்டுக் குழு, ஒரு நபருக்கு எதிராக சாட்சியம் அல்லது ஆவணங்கள் பெறுவதில் உள்ள பிணக்குகள் மீது முடிவு எடுக்க மக்களவைத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது.

நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்ட வழக்குகள்

போபர்ஸ் ஊழல்

இந்தியாவில் முதல் நாடாளுமன்றக் கூட்டுக் குழு, ஆகஸ்டு 1987-ல் போபர்ஸ் பீரங்கி கொள்முதலில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரிக்க அமைக்கப்பட்டது. இக்குழுவில் ஆளும் அரசின் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் பெரும்பான்மையாக கொண்டிருந்ததால், எதிர்கட்சிகள் இக்கூட்டுக் குழுவை புறக்கணித்தது. இக்கூட்டுக் குழு தனது விசாரணை அறிக்கையை 23 ஏப்ரல் 1988-ல் நாடாளுமன்ற அவைத் தலைவரிடம் வழங்கியது. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுக் குழுவின் அறிக்கையை, எதிர்கட்சிகள் ஏற்றுக் கொள்ள மறுத்தனர்.

ஹர்சத் மேத்தா பங்குச்சந்தை ஊழல்

இந்தியாவின் இரண்டாவது நாடாளுமன்றக் கூட்டுக் குழு, இந்தியப் பங்குச் சந்தையின் பங்கு பத்திரங்கள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகளில் ஹர்சத் மேத்தா என்பவர் செய்த முறைகேடுகளை விசாரிக்க, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச்சர் இராம் நிவாஸ் மிர்தா தலைமையில் ஆகஸ்ட் 1992-ல் அமைக்கப்பட்டது. இக்கூட்டுக் குழுவின் பரிந்துரைகளை இந்திய அரசு முழுமையாக ஏற்றுக் கொள்ளவுமில்லை மறுக்கவும் இல்லை.

கேத்தான் பரேக் பங்குச் சந்தை ஊழல்

2001-இல் கேத்தான் பரேக் எனும் பங்குச் சந்தை வணிகர் பங்குப் பத்திரங்கள் விற்பனை மற்றும் கொள்முதல்களில் செய்த ஊழல்களை விசாரிப்பதற்கு மூன்றாவது நாடாளுமன்றக் கூட்டுக் குழு ஏப்ரல் 2011-இல் அமைக்கப்பட்டது. இதன் தலைவராக பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ் மணி திரிபாதி தலைமை தாங்கினார். இக்குழு 105 அமர்வுகளில் நடததிய விசாரணையின் அறிக்கை 13 திசம்பர் 2002 அன்று நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பித்தது. இக்குழு பங்கு பரிவர்த்தனைகளை குறித்தான தனது பரிந்துரைகளை இந்திய அரசு நடைமுறைப்படுத்த முன்வரவில்லை.

குளிர்பானத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த விவகாரம்

பொதுமக்கள் பருகும் குளிர்பானங்களில் பூச்சிக் கொல்லி மருந்து கலந்திருப்பது குறித்து விசாரணை நடத்த, நான்காவது நாடாளுமன்றக் கூட்டுக் குழு ஆகஸ்ட் 2003-ல் மத்திய அமைச்சர் சரத் பவார் தலைமையில் நிறுவப்பட்டது. இக்குழு 17 அமர்வுகளில் விசாரணை நடத்தி, குளிர்பானங்களில் பூச்சிக் கொல்லி மருந்துகள் கலந்திருப்பதை உறுதிப்படுத்தி தனது அறிக்கையை பிப்-4, 2004-ல் நாடாளுமன்றத்திற்கு வழங்கியது. இக்கூட்டுக் குழுவின் பரிந்துரைகளை குளிர்பானங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் கடைபிடிக்க இதுவரை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

2ஜி ஊழல்

ஐந்தாம் நாடாளுமன்றக் கூட்டுக் குழு, பிப்ரவரி 2011-ல் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்க, பி. சி. சாக்கோ தலைமையில், 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட கூட்டுக் குழு நிறுவப்பட்டது. 30 பேர் கொண்ட இக்குழுவில் பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட 15 எதிர்கட்சி உறுப்பினர்கள் இருந்தனர். கூட்டுக் குழுவின் தலைவர் பி. சி. சாக்கோ, 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் நிதியமைச்சர் ப. சிதம்பரம் ஆகியவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என முதற்கட்ட வரைவு அறிக்கை நாடாளுமன்றத்தில் வழங்கினார். எனவே கூட்டுக் குழுவின் எதிர்கட்சி உறுப்பினர்கள், கூட்டுக் குழு தலைவர் பி. சி. சாக்கோவை கூட்டுக் குழு தலைவர் பதவியிலிருந்து அகற்றக் கோரினர். பின்னர் கூட்டுக் குழுத் தலைவர் சாக்கோ தனது வரைவு அறிக்கையை மாற்றி அமைக்க ஒப்புக் கொண்டார்.

நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் செயல்பாடுகள்

* ஒரு விவகாரம் தொடர்பான ஆவணங்களை, எழுத்து வடிவிலோ, குரல் வடிவிலோ சம்பந்தப்பட்டவர்களிடம் கோருவதற்கு நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிற்கு அதிகாரம் உண்டு.

* ஆதாரம் கோருவதில் சிக்கல் ஏற்பட்டால், அந்த விவகாரத்தில் சபாநாயகரின் முடிவே இறுதியானது.

* உரிய ஆவணங்களை நாடாளுமன்றத்தில் சமர்பித்தபின் இக்குழுவானது கலைக்கப்படும்.

* குறிப்பிட்ட விவகாரம் தொடர்பான தரப்பினரை விசாரணைக்கு அழைக்கலாம்; குழு முன்பு ஆஜராகும் படி சம்மன் அனுப்பலாம்.

2014-க்கு பிறகு நடந்த விவகாரங்களுக்கு எந்தக் குழுவும் அமைக்கப்படவில்லை. குறிப்பாக, ரபேல் விவகாரம் தொடர்பாக எந்த குழுவும் அமைக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது, அதானி குழுமம் செய்த மோசடி தொடர்பான அறிக்கையை ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டதையடுத்து, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க போராட்டம் நடத்தி வருகின்றனர்.