கர்நாடக தேர்தலில் பாஜக காங்கிரஸ் வியூகம் என்ன? 

website post (61)

கர்நாடக தேர்தல்

224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டசபையின் பதவிக்காலம் மே 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. கர்நாடகாவில் தற்போது முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. இந்தநிலையில், இந்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள கர்நாடக சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டிருந்தது. வரும் மே 10-ம் தேதி வாக்குப்பதிவும், மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. 

பாஜக தந்திரம்

நடக்க இருக்கும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த முறையும் வழக்கம் போல் காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனை போட்டியாகவே களம் அமைந்துள்ளது. கடந்த சட்டப்பேரவைத்தேர்தலில் பாஜகவை பொறுத்தவரை கட்சிகளை உடைத்து, முக்கிய தலைவர்களை இழுத்து வந்து அரசியலை தக்க வைத்தது. இது தற்போது மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு விட்டது.

காங்கிரஸ் வியூகம்

இம்முறை பலமான ஏற்பாடுகளுடன் காங்கிரஸ் களமிறங்கியுள்ளது. இக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். எனவே தனது சொந்த மாநிலத்தில் வெற்றி பெற்றுவிட வேண்டிய பொறுப்பு அதிகமாகவே இருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அந்தவகையில்,  

வேலையில்லா பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும் என ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். மேலும் தமிழகத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செயல்படுத்தியிருக்கக்கூடிய மகளிருக்கான உரிமைத்தொகை திட்டத்தை காங்கிரஸ் கையில் எடுத்திருக்கிறது. அந்தவகையில், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்திருக்கிறது. மேலும், 200 யூனிட் இலவச மின்சாரம், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 கிலோ இலவச அரிசி என வாக்குறுதிகளை அளித்து வருகிறது.

பாஜக வியூகம்

அதேபோல், பாஜகவும் கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிக்க முனைப்பு வருகிறது. ஆளும் பாஜகவிற்கு எதிரான மனநிலை மக்கள் மத்தியில் காணப்படுகிறது. அரசின் ஒப்பந்தப் பணிகளுக்கு 40 சதவீத கமிஷன் கேட்ட விஷயம் மிகப்பெரிய கரும்புள்ளியாக அமைந்துள்ளது. இஸ்லாமியர்களின் 4 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது, அந்த சமூக மக்களை இழைத்த துரோகம் என்று அங்குள்ள பாஜக பொறுப்பாளர்கள் என்று கூறுகிறார்கள்.

கடந்த 30 ஆண்டுகளாக இதர பிற்படுத்தப்பட்டவர்கள் பிரிவில் இஸ்லாமியர்களுக்கு 4 % இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இஸ்லாமியர்களுக்கான 4 % இட ஒதுக்கீட்டை பாஜக அரசு கடந்த வாரம் ரத்து செய்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதனால் அதனை சரிசெய்ய இஸ்லாமியர்களுக்கான 4% இட ஒதுக்கீட்டை சமமாக பிரித்து வீர சைவ லிங்காயத், ஒக்கலிக சமூகங்களுக்கு வழங்க பாஜக அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடகாவில் வீர சைவ லிங்காயத், ஒக்கலிக சமூகங்கள் பெரும்பான்மை சமூகங்களாக பார்க்கப்படுகிறது. 

மக்கள் என்ன சொல்கிறார்கள்

கடந்த பாஜக ஆட்சியில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவை பெரிதும் பாதித்துள்ளதாக அம்மாநில மக்கள் தெரிவிக்கின்றனர். கர்நாடக தேர்தலையொட்டி பிரதமரும், உள்துறை அமைச்சரும் அடிக்கடி கர்நாடகாவிற்கு சென்ற வண்ணம் இருந்தனர். இது மக்கள் மத்தியில் வெறுப்பைத் தான் பெற்றிருக்கின்றனர். கடந்த மூன்றரை ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தனர். அப்போதெல்லாம் ஏன் இங்கு வரவில்லை. தேர்தல் வரவுள்ளதால் இப்படி மாறி மாறி சுற்றுப் பயணம் வருகின்றனர், அறிவிப்புகள் வெளியிடுகின்றனர் என்று மக்கள் தெரிவிக்கின்றனர். 

இந்த கர்நாடகத் தேர்தல் பாஜக காங்கிரஸ் கட்சியினர் வெற்றிக்கு அடிகோலி பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகின்றனர். இது அப்படியே வாக்குகளாக அறுவடையாகுமா என்பதை மே 13 தான் பார்க்க முடியும்.