H3N2 வைரஸ் என்றால் என்ன.? அதன் அறிகுறிகள் என்ன.? செய்ய வேண்டியவை.. செய்யக்கூடாதவை.!

vairus

H3N2 என்றால் என்ன.?

H3N2 என்பது இன்ஃப்ளூயன்ஸா வைரஸின் மாறுபாடாகும். H3N2 இன்ஃப்ளூயன்சா வைரஸ்கள் 1968 இல் மனிதர்களில் பரவத் தொடங்கின, பின்னர் அவை கணிசமாக உருவாகியுள்ளன. H3N2 வைரஸ் சுவாசப்பகுதியில் தொற்றை ஏற்படுத்தும் ஒரு வைரஸ் ஆகும். இந்த வைரஸ் பறவைகள் மற்றும் வவ்வால்களையும் பாதிக்கூடியது. பறவைகள் மற்றும் பிற விலங்குகளிடம் இந்த வைரஸ் மாறுபாடு அடைந்து பல திரிபுகளாக உள்ளன. இன்ஃபுளூயன்சா ஏ வகை வைரசின் துணை மாறுபாடான H3N2 வைரஸ் மனிதனுக்கு காய்ச்சலை ஏற்படுத்துவதில் முக்கிய காரணமாக இருப்பதாக மத்திய நோய் தடுப்பு கட்டுப்பாடு மற்றும் உலக சுகாதார அமைப்பு கூறுகிறது

H3N2 இன்புளூயன்சா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது. இருமும் போதும், தும்மும் போதும் இந்த வைரஸ் மற்றொருவருக்கு பரவுகிறது. வைரஸ் இருக்கும் மேற்பரப்பை தொட்டு விட்டு மூக்கு மற்றும் வாய்ப்பகுதியை தொட்டாலும் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படும். கர்ப்பிணிகள், குழந்தைகள், வயதானவர்கள், வேறு நோய்கள் இருப்பவர்களுக்கு இந்த வைரஸ் பதிப்பு ஏற்படும். 

அறிகுறிகள் 

இருமல், சளி மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகள் தோன்றும். காற்று மாசு H3N2 வைரசை தீவிரப்படுத்துகிறது. இது எளிதில் தொற்றக்கூடிய வைரஸ். இருமல், குமட்டல், வாந்தி, தொண்டை வலி, உடல் வலி மற்றும் வயிற்றுப்போக்கு, மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு பகுதியில் அசவுகரியமாக உணர்தல், தொடர் காய்ச்சல், உணவை விழுங்கும் போது தொண்டையில் வலி ஆகியவை கூடுதல் பொதுவான அறிகுறிகளாகும்.

செய்ய வேண்டியவை

பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து இந்த வைரஸ் மற்றொருவருக்கு எளிதில் பரவக் கூடியதாகும். இதனால், கீழ்கண்ட வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டியது அவசியம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். சோப்பு போட்டு அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். முகக்கவசம் அணிவதோடு கூட்டமிக்க இடங்களை தவிர்க்க வேண்டும். மூக்கு மற்றும் வாய் பகுதியை தொடுவதை தவிர்க்க வேண்டும். இருமும் போது தும்மும் போது முறையாக துணிகளால் வாயை மூடிக்கொள்ள வேண்டும். காய்ச்சல் உடல் வலி இருந்தால் பேராசிட்டம்மல் மாத்திரை எடுத்துக்கொள்ளலாம்.

செய்யக்கூடாதவை

பொது இடங்களில் துப்பக்கூடாது, கைகளை குலுக்குதல் போன்ற உடல் ரீதியாக தொடுதல் கூடாது. சுய மருந்துகள் குறிப்பாக ஆண்டி பயாட்டிக் எடுத்துக்கொள்ளக்கூடாது. நெருக்கமாக அமர்ந்து சாப்பிடக்கூடாது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.