அடுத்தடுத்து வெளியேறும் பாஜக முக்கிய நிர்வாகிகள்.. என்ன நடக்கிறது தமிழக பாஜகவில்.?  

bjp

தமிழ்நாடு பாஜகவில் சமீப காலமாக நடந்து கொண்டிருக்கும் உட்கட்சி மோதல்கள் குறித்த விவாதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழக பாஜகவில் அண்ணாமலை தலைவராக பதவியேற்ற பின்பு, கட்சியில் இருந்த முக்கிய புள்ளிகள் அடுத்தடுத்து விலகுவது தொடர் கதையாகி வருகிறது. கே.டி. ராகவன் தொடர்ந்து தற்போது திலீப் கண்ணன் வரை வெளியேறி, தமிழக பாஜக உட்கட்சி விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்கள். தற்போது தமிழக பாஜகவில் என்ன நடக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ள சூழலில், அதற்கான விடையைத் தேடி ஆராய தேவை இருக்கிறது. 

பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சரான காரணத்தால் அண்ணாமலை திடீரென மாநில தலைவர் பொறுப்பில் அமர்த்தப்பட்டார். இந்தநிலையில், எச்.ராஜா, கருப்பு முருகானந்தம், வானதி சீனிவாசன் என்று பல மூத்த தலைவர்கள் இருந்த போதிலும், கட்சிக்கு வந்து 2 வருடம் கூட ஆகாத அண்ணாமலை நேரடியாக பாஜக தமிழக தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டது பாஜக மூத்த தலைவர்கள் மத்தியில் அதிருப்தியில் இருந்தனர். 

தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற பின்னர், தொடர்ச்சியாக திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அடுத்தடுத்து பத்திரிக்கையாளர் சந்திப்பு, திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் என கர்நாடக சிங்கம் என்று ஆரம்பத்தில் புகழ்ந்ததுபோல, சிங்கம் போல செயல்பட்டு வந்தார். சிங்கம் தன்னை தனித்துவபடுத்திக் காட்டிக்கொள்வதற்காக விளைந்ததன் காரணமாகவோ என்னவோ தெரியவில்லை, ஒரு வார் ரூம் அமைத்து கட்சி நிர்வாகிகளை உளவு பார்ப்பது போன்ற உட்கட்சி விவகாரங்களை தானாகவே ஏற்படுத்திக் கொண்டாரா என்பது புரியாத புதிர்.

ஆரம்ப கட்டமாக, தமிழக பாஜகவில் இந்த உட்கட்சி மோதல் வெளிப்படையாக தெரிந்தது கே.டி. ராகவன் விஷயத்தில்தான். கேடி ராகவன் பெண் ஒருவருடன் பேசும் ஆபாசமான வீடியோ ஒன்றை அண்ணாமலையிடம் பாஜக நிர்வாகி மற்றும் முன்னாள் பத்திரிகையாளர் ஒருவர் காட்ட, அதில் அண்ணாமலை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருந்தார். கடைசியில் கே.டி. ராகவன் வீடியோ, இது தொடர்பாக அண்ணாமலை பேசிய ஆடியோ உட்பட அனைத்தும் இணையத்தில் கசிந்தது. இந்த விவகாரத்தில் கடைசியில் கேடி ராகவன் பாஜகவின் கட்சி பொறுப்புகளில் இருந்து விலகினார். அதில் இருந்து மொத்தமாக அரசியலில் இருந்தே ஒதுங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தொடர்பாக ஆணையம் அமைக்கப்பட்டது ஆனால், அது என்ன ஆனது என தெரியவில்லை. இந்த சம்பவம் மூலம் தான் பாஜகவில் இருக்கக்கூடிய மூத்த நிர்வாகிகள் அண்ணாமலை மீது கோபத்தில் இருக்கிறார்கள் என்ற செய்தி வெளியே வரத் தொடங்கியது.

அடுத்தபடியாக, மதுரையில் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் சர்ச்சையானது. அந்த சம்பவம் விஷ்வரூபம் எடுத்தநிலையில், வேறு வழியின்றி அண்ணாமலை விளக்கம் கொடுத்தார். நான் வன்முறையை ஆதரிக்க மாட்டேன், நம்முடைய கட்சி வன்முறையை ஆதரிக்கும் கட்சி அல்ல என விளக்கம் கொடுத்த அதே அண்ணாமலை, அதை எப்படி அரசியலாக்கலாம் என்று அண்ணாமலை பேசியதாக வெளியான ஆடியோவால் பெரிதும் சர்ச்சையானது. 

இந்த விவகாரத்தில் முன்னாள் எம்எல்ஏ சரவணன், பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை நேரில் பார்த்து மன்னிப்பு கேட்டதோடு பாஜகவில் இருந்தும் வெளியேறினார். பாஜகவின் கொள்கைகள் எனக்கு ஒத்துவராது. பாஜக பிரிவினை அரசியலை செய்கிறது. மன உளைச்சலோடுதான் நான் பாஜகவில் இருந்தேன். அமைச்சர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மன உளைச்சலை ஏற்படுத்தியது. தூக்கம் வரவில்லை. இதனால் அவரை நேரில் சந்தித்து மன்னிப்பு தெரிவித்தேன். பாஜகவில் இருந்து விலகுகிறேன், என்று சரவணன் தெரிவித்தார்.

இந்த சூழலில், பாஜகவில் நடக்கும் உட்கட்சி மோதல் குறித்து காயத்ரி ரகுராம் வெளிப்படையாக பேசினார். பாஜகவில் சீனியர்கள் மதிக்கப்படுவது இல்லை என்று தெரிவித்து இருந்தார். தமிழக பாஜகவில் இருக்கும் சிலர் மூத்த நிர்வாகிகளுக்கு எதிராக, டிரெண்டிங் செய்கின்றனர். எங்களுக்கு எதிராக ஒரு வார் ரூமே இயங்கிக்கொண்டு இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தநிலையில், அவர் கட்சி நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படுகிறார் என்று அண்ணாமலை காயத்ரி ரகுராமை சஸ்பெண்ட் செய்தார். 

அது ஒரு பக்கமிருக்க, இன்னொரு பக்கம் பாஜகவில் திருச்சி சூர்யா - டெய்சி விவகாரம் பெரிய சர்ச்சையானது. எல் முருகன், கேசவ விநாயகம் ஆகியோர் அண்ணாமலையை வேலை செய்ய விடாமல் தடுக்கின்றனர் என்றும் திருச்சி சூர்யா புகார் வைத்துவிட்டு இந்த சர்ச்சை காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட திருச்சி சூர்யா பாஜகவில் இருந்து வெளியேறினார்.

அண்ணாமலை வந்த பின் தமிழக பாஜக சர்ச்சை மேல் சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. கட்சி மீது இணையத்தில் கட்சியின் மூத்த உறுப்பினர்களே புகார் வைக்கும் நிலைமை ஏற்பட்டு உள்ளது. அண்ணாமலை தலைமை பதவியை சமாளிக்க திணறுகிறாரோ என்று கேட்கும் அளவிற்கு கட்சி குறித்த விமர்சனங்கள் அதிகரித்துள்ளநிலையில் தற்போது, பாஜக தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் மற்றும் பாஜக தகவல் தொழில்நுட்ப மாநில செயலாளர் திலீப் கண்ணன் கட்சியைவிட்டு விலகியிருப்பது அரசியல் களத்தில் பெரும் புழுதியை கிளப்பியிருக்கிறது. 

என்னால் என்னால் முடிந்த வரை  பல சங்கடங்களை கடந்து, கடந்த 1.5 ஆண்டுகளாக பயணித்தேன்! உண்மையாக நேர்மையாக உழைத்தேன், வேதனை மட்டுமே மிச்சம்! என்று ட்விட்டரில் பதிவிட்டு பாஜகவில் இருந்து விடைபெறுகிறேன் என்று அறிவித்தார். அவர் கட்சியிலிருந்து விலகியதற்க்கான காரணத்தை அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது; 

பாஜக தலைமைகளையும் தொண்டர்களையும் செருப்பாக பயன்படுத்தி கட்சியைப் பற்றி துளியும் சிந்திக்காது, சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அல்பத்தனம் எதுவுமில்லை. “மனநலம் குன்றிய மனிதரைப்போல் செயல்படும் நபரால் கட்சி அழிவை நோக்கி செல்வதை ஒவ்வொரு நாளும் பார்க்க முடிகிறது. 2019-ல் இருந்த கட்சி அமைப்பு தற்போது 20% கூட இல்லை. அமைச்சர்களை கடுமையாக எதிர்த்துவிட்டு திரைமறைவில் பேரம் பேசும் நபருடன் எப்படி பயணிக்க முடியும் . திராவிட மாடல் அமைச்சர்களையே மிஞ்சும் அளவிற்கு ஒரு #420 மலை-யாக இருக்கும் நபரால் தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே மிகப்பெரிய கேடு என குறிப்பிட்டு ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை நம்பி எப்படி பயணிக்க முடியும் என்ற வினாவுடன் வெளியேறினார். 

பாஜகவிலிருந்து வெளியேறிய அடுத்தகனமே, நேற்றைக்கு முன்தினம் (மார்ச்-05) எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தது அரசியல் வட்டாத்தில் பெரும் பேசுபொருளாக இருந்தது.

பாஜகவிலிருந்து அதிமுகவில் இணைந்ததையடுத்து, தமிழ்நாடு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டி, அதிமுக கூட்டணி கட்சியாக இருந்து இதை செய்திருக்க கூடாது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது அதிமுக பாஜக கூட்டணி உரசலை ஏற்படுத்த தொடங்கியிருக்கிறதா என்ற கேள்வி எழத் தொடங்கியிருக்கிறது.

அடுத்தபடியாக, கரு.நாகராஜன் பாஜகவில் இருந்து பிரிந்து சென்றிருக்கும் நிர்மல் குமார் விடுத்திருந்த அறிக்கையைப் படித்தேன். கடந்த ஒன்றை ஆண்டுகளாக கட்சிப் பணியைத்தான் செய்து கொண்டிருக்கிறார் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், அவர் குழப்பத்தில் இருந்திருக்கிறார் என்பது அவருடைய பிரிவு செய்தியில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. கட்சியை விட்டுப் பிரியும் நேரத்தில், செந்தாமரை மீது சேறு பூசிச் செல்லும் செயலால், தன்னை சிறுமைப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று சி.டி.ஆர். நிர்மல் குமாரை விமர்சனம் செய்துள்ளார்.

சி.டி.ஆர். நிர்மல் குமார் விலகியதையடுத்து, தமிழ்நாடு பாஜக மாநில தொழில்நுட்ப மாநில செயலாளர் திலீப் கண்ணன் மற்றும் பாஜக ஓபிசி அணியின் மாநில செயலாளர் அம்மு என்கிற ஜோதி பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர். திலீப் கண்னன் "இந்த வார் ரூம் சுவர் இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகுதோ? சொந்த கட்சியில் இத்தனை வருடம் உழைத்தவனை வேவு பார்ப்பது, ஊர் உலகமே கேவலமாக பேசும் ரொட்டியை கூடவே வச்சு சுற்றுவதுதான் இந்த புனிதரின் வேலை போல" என்று திலீப் கண்னன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதிலிருந்து, மூத்த நிர்வாகிகள் பிரச்னை, ஆடியோ வீடியோ பிரச்னை, உட்கட்சி விவகாரம் என தொடர்ந்து அரசியலில் பேசப்பட்டுவந்த நிலையில், இந்த விவகாரமெல்லாம் பூதாகரமெடுத்து பாஜக உட்கட்சிக்குள் உலாவிக்கொண்டிருந்த விவகாரங்கள் எல்லாம் தற்போது வெளியில் வந்து கொண்டிருக்கக்கூடிய பாஜக நிர்வாகிகளால் விஷ்வரூபம் எடுக்கத்தொடங்கி இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் தமிழக பாஜக எதிர்காலத்தில் முனைப்புடன் மக்கள் மத்தியில் எப்படி செயல்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.