என்ன நடக்கிறது சூடானில்.? காரணம் என்ன.? தற்போதைய சூழல் என்ன.?

sudan

சூடான் தாக்குதலுக்கு காரணம் என்ன? 

சூடானில் 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு நடந்தது. அப்போதிருந்து அந்நாட்டை ராணுவப் படைத்தலைவர்களைக் கொண்ட ஒரு குழு நிர்வகித்து வருகிறது. இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் சிக்கலில் பிரதானமாக இரண்டு ராணுவத் தளபதிகள் உள்ளனர். ஜெனரல் ஃபத்தா அல்-புர்ஹான், சூடானின் படைத்தலைவர். நடைமுறைப்படி இவர் நாட்டின் ஜனாதிபதி. அவருக்கு அடுத்த நிலையில் இருப்பவர் ஜெனரல் ஹம்தான் தாகலோ. இவர் ஹெமெத்தி என்றும் அழைக்கப்படுகிறார். இவர் சூடானின் துணை ராணுவமான Rapid Support Forces இன் (RSF) தலைவர்.

இருவருக்கும் இடையே ஜனநாயக அரசினை அமைப்பது போன்ற விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. இருவருக்குமிடையே முக்கியமான பிரச்சனைகள் RSF-ன் ஒரு லட்சம் வீரர்களை ராணுவத்தில் இணைப்பதும், அப்படி நடந்தால், படைகளுக்கு யார் தலைமை தாங்குவது என்ற மோதல் காரணமாக ஏற்பட்ட பிரச்னை கடந்த வாரம் மோதலாக வெடித்தது. இருதரப்புக்கும் இடையே நடக்கும் மோதலிலின் காரணமாக 200 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

பஷீர் அதிபராக இருந்தபோது, 30 ஆண்டுகளுக்குமேல் நீண்டு கொண்டிருந்த அவரது ஆட்சிக்கு முடிவு வேண்டி மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். ராணுவம் அவருக்கு எதிராக ஒரு ஆட்சிக்கவிழ்ப்பை நிகழ்த்தியது. அதன் பின்னும், ஜனநாயக அரசு வேண்டி மக்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். அதைத்தொடர்ந்து, மக்களும் ராணுவமும் இணைந்த ஒரு அரசு நிறுவப்பட்டது. ஆனால், இதுவும் 2021-ம் அண்டு நிகழ்ந்த ஒரு ஆட்சிக்கவிழ்ப்பினால் வீழ்த்தப்பட்டது. அப்போதிருந்து ஜெனரல் புர்ஹான் மற்றும் ஜெனரல் தாகலோ ஆகியோருக்கு இடையேயான போட்டி தீவிரமடைந்து வந்திருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம், ஜனநாயக அரசினை நிறுவுவதறகான ஒரு ஒப்பந்தம் சம்மதமானது. ஆனால், இறுதிகட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.

தற்போதைய சூழல் என்ன.?

கடந்த செவ்வாய்க்கிழமையன்று அமெரிக்கத் தரகு போர்நிறுத்தத்திற்குக் கட்டுப்படுவதற்கு இராணுவமும் RSF-ம் ஒப்புக்கொண்ட போதிலும், கார்ட்டூமில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக மோதல்கள் தொடர்கின்றன, இதனால் குடியிருப்பாளர்கள் உயிருக்கு பயந்து உணவு, தண்ணீர் மற்றும் நகரம் முழுவதும் உள்ள ஹோட்டல்கள் மற்றும் பதுங்கு குழிகளில் பதுங்கி உள்ளனர். மின்சாரம், பல்பொருள் அங்காடிகள் சோதனையிடப்படுவதால் அடிப்படை வசதிகளைப் பெறுவது கடினமாகி வருகிறது.

சூடானின் தலைநகரமான கார்ட்டூமில் தோராயமாக 4000 இந்தியர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். குஜராத்தைச் சேர்ந்த பராஸ் என்பவர் கடந்த மாதம் தன்னுடைய தொழில் சம்பந்தமாக சூடான் நாட்டிற்கு சென்றிருக்கிறார். அவர்  தற்போது இந்திய தூதரகத்திற்கு அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் ஆறு பேருடன் தங்கியிருக்கிறார். அவர் தற்போது சூடானின் தலைநகரில் மோசாமான சூழல் நிலவுதாக தெரிவித்திருக்கிறார்.

"நாங்கள் தற்போது மிகவும் பயத்தில் இருக்கிறோம். நாங்கள் கடந்த 5 நாட்களாக தூங்கவில்லை. தண்ணீரும் உணவும் கிடைக்காமல் கழிவறை நீரைக் குடித்து உயிர் வாழ்ந்து வருகிறோம். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் தான் மின்சாரம் கிடைக்கிறது. அதை வைத்து எங்களால் தொலைபேசிக்கு சார்ஜ் போட முடிவதில்லை" என்று தன்னுடைய தொலைபேசி வாயிலாக பிரிண்ட் பத்திரிக்கைக்கு தெரிவித்திருக்கிறார். 

மேலும், "நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகில் பீரங்கி வாகனங்களும், ராணுவ வீரர்களும் வந்தனர். ஆனால், அவர்கள் சூடான் ராணுவ படையா இல்லை ரேபிட் சப்போர்ட் போர்ஸா என்று தெரியவில்லை. நாங்கள் இந்தியாவிற்கு பாதுகாப்பாக திரும்புவோம் என்ற நம்பிக்கையில்லை. இதை என்னுடைய கடைசி வார்த்தையாக எடுத்துக்கொள்ளுங்கள்" என்று தெரிவித்திருக்கிறார். 

இந்திய தூதரகம் விளக்கம்

சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. சூடானில் சிக்கலான மற்றும் வளர்ந்து வரும் பாதுகாப்பு நிலைமையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கு பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து பணியில் ஈடுபட்டு வருகிறோம். சூடானில் உள்ள அதிகாரிகளைத் தவிர்த்து, வெளியுறவுத்துறையும், சூடான் இந்திய தூதரகமும் ஐக்கிய நாடுகள், சவுதி அரேபியா, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம் என்று இந்திய தூதரகம் தெரிவித்திருக்கிறது. 

ஆபரேஷன் காவிரி

இதனையடுத்து, சூடானில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. “ஆபரேஷன் காவிரி” என்ற திட்டத்தின் மூலம் சூடானில் இருந்து மீட்புப்பணியை தொடங்கி இருக்கிறது இந்திய அரசு. முதல் கட்டமாக 500 இந்தியர்கள், கப்பல் மூலம் மீட்கப்பட இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சூடானில் இருந்து இந்தியர்களை மீட்பதற்கு அங்குள்ள இந்தியர்களை ஒருங்கிணைக்கும் பணியில் சூடான் இந்திய தூதரகம் ஈடுபட்டு வருகிறது.