மணிப்பூர் டிஜிபி என்ன செய்து கொண்டிருக்கிறார்?.. உச்சநீதிமன்றம் அதிரடி கேள்வி.!

chief

பேசுபொருளான மணிப்பூர்

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே அசாதாரண சூழல் நிலவி வருகிறது. அம்மாநிலத்தில் இரு சமூக குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் காலப்போக்கில் வன்முறையாக மாறியது. இதற்கு மத்தியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மே மாதம் நிகழ்ந்த சம்பவத்தில் இரண்டு பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி பொதுவெளியில் அழைத்துச் சென்ற வீடியோ வெளியாகி இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியது. 

பாதிக்கப்பட்ட  பெண்கள் வழக்கு

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட இரு பெண்கள் மத்திய அரசு மற்றும் மணிப்பூர் அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த சம்பவத்தில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்திருந்தனர். மேலும், பாதிக்கப்பட்ட அந்த பெண்களின் அடையாளம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

பாதிக்கப்பட்ட 2 பெண்களுக்கு நாங்கள் நீதி வழங்குவோம்

இவ்வழக்கு தொடர்பான விசாரணை கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது இந்தச் சம்பவம் மிகவும் கவலையளிக்கும் வகையில் இருப்பதாகத் தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதி, அங்கு நடக்கும் சம்பவங்கள் மொத்தமும் அரசியலமைப்பு தோல்வி அடைந்ததைக் காட்டுவதாகக் கடுமையான கருத்துகளைத் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில், இந்த வழக்கு தொடர்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒருசில கருத்துக்களை நீதிபதி தெரிவித்தனர். 

அதில், மணிப்பூரில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த பிரச்சனைகளையும் பரந்த கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் என்று தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, பாதிக்கப்பட்ட 2 பெண்களுக்கு நாங்கள் நீதி வழங்குவோம் என்றும், மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பல பெண்கள் புகார் அளிக்காமல் உள்ளதாகவும், பெண்களுக்கு எதிரான கொடுமைகளில் புகார் கொடுக்கவில்லை என்றாலும் விசாரிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார்.

மணிப்பூர் டிஜிபி என்ன செய்து கொண்டிருக்கிறார்?

இந்தநிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று (ஆக-1 ) மீண்டும் வந்தது. அப்போது, மணிப்பூரில் காவல்துறை கட்டுப்பாட்டை முழுமையாக இழந்துவிட்டதாக நீதிபதி அதிருப்தி தெரிவித்து, மணிப்பூர் மாநிலத்தில் வன்முறையை கட்டுப்படுத்தாமல் டிஜிபி என்ன செய்து கொண்டிருக்கிறார்? என கேள்வி எழுப்பினார். மேலும், பெண்களுக்கு கொடுமை இழைத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்றும், 6 ஆயிரத்திற்கும் அதிகமான வழக்குகளில் 50 மட்டும் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது எனில் மற்ற வழக்குகளில் நிலை என்ன? என்றும் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.  

ஆஜராக உத்தரவு

இறுதியாக, மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு இல்லை என அதிருப்தி தெரிவித்து, சட்டம் ஒழுங்கு தொடர்பாக மணிப்பூர் டிஜிபி தனிப்பட்ட முறையில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வரும் 4-ம் தேதி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.