அண்ணாமலை டெல்லி சென்று வந்ததன் ரகசியம் என்ன.?

anna

நேற்றைய தினம் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து பல்வேறு அரசியல் சூழல்களை பற்றி விவாதித்ததாக டெல்லியில் இருந்து திரும்பி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளார். அவர் அளித்துள்ள விளக்கம் பின்வருமாறு;

ராகுல் ஆதங்கத்தில் பேசுகிறார்

ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை தமிழக காங்கிரஸ் திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள். ராகுல் காந்திக்கு இதற்கு முன்னாடியே அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது. இது அவருக்கு இரண்டாவது முறை. இதுமட்டுமல்லாமல், பாரத் ஜோடோ யாத்திரையின் போது, பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள் என்று பேசியிருந்தார். அதை விசாரிக்க டெல்லி காவல்துறை சென்றபோது, அதற்கு ராகுல் காந்தி 'நான் அதை மறந்துவிட்டேன்' என்று காவல்துறையிடம் தெரிவித்ததாக அண்ணாமலை குறிப்பிட்டிருக்கிறார். அதன்பிறகு ராகுல் காந்தியின் லண்டன் பேச்சை குறிப்பிட்டு பேசிய அண்ணாமலை, இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்த நாடு லண்டன். இவர் அங்கு சென்று இந்தியாவின் ஜனநாயகம் கெட்டுப்போய்விட்டது என்று பேசியிருக்கிறார். இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது, ராகுல் காந்தியால் முடியவில்லை, ஒரு ஆதங்கத்தில் பேசியிருக்கிறார் என்று தெரிவித்தார்.  

ராகுலுக்கு இது முதல் அல்ல

ராகுல் காந்தி வயநாடு எம்.பி. தேர்தலுக்கு போட்டிபோடும்போது, 'வட இந்தியாவில் என்னை புரிந்துகொள்ள மாட்டார்கள், பிரச்னைகள் பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது' என்று காலம் காலமாக அவருக்கு சோறு போட்ட மக்களையே இழிவாக பேசியவர் அவர். ஆகவே, தமிழக மக்களுக்கு இதன்மூலம் தெரிவிப்பது என்னவென்றால், ராகுல் காந்திக்கு இது முதல் அல்ல, தொடர்ந்து இது போல் செய்து கொண்டிருக்கிறார் என்று பேசினார். 

காங்கிரஸின் நிலைமை

தொடர்ந்து ராகுலின் சிறை தண்டனை உத்தரவை எதிர்த்து தமிழக காங்கிரஸ் கும்பகோணத்தில் ரயில் மறியல் போராட்டத்தைக் குறிப்பிட்டு  பேசிய அண்ணாமலை, திமுகவிடமிருந்து காங்கிரஸ் கட்சியினரும் கற்றுக்கொண்டார்கள். ரயிலே வராத தண்டவாளத்தில் நின்று, காங்கிரஸ் கட்சியின் சின்னத்தில் 5 விரல்கள் இருக்கிறது. ஆனால், அந்த போராட்டத்தில் 3 பேர் தான் இருக்கிறார்கள். இதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலைமை. தமிழக காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியின் சிறை தண்டனை உத்தரவுப் பற்றி சரியான கருத்துக்களை மக்களிடம் சேர்க்காமல் இருந்ததனால் இந்த விளக்கத்தை அளிக்க வேண்டிய நிலை என்று குறிப்பிட்டார். 

தமிழக அரசியல் களம்

பின்னர், நேற்றைய டெல்லி பயணம் பற்றி பேசிய அண்ணாமலை, டெல்லியிலிருந்து கடைக்கோடி வரைக்கும் பாஜக கட்சியை வளர்க்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். அதைப்பற்றி பேசினோம். மேலும், கர்நாடகா தேர்தலைப் பற்றி பேசினோம். அடுத்தபடியாக, தமிழக அரசியல் களம் பற்றி பேசினோம் எனக் குறிப்பிட்டார். தமிழக அரசியல் களம் மிகவும் வித்தியாசமாக சூடாக இருக்கிறது என்று எடுத்துரைத்தேன்.

உரசல்கள் வருவது சகஜம்

மேலும், கூட்டணி தொடர்பாக பேசிய அவர், எந்த ஒரு கூச்சமோ, குழப்பமோ இல்லை. நான் ஏற்கனவே சொன்னதுபோல, பாரதீய ஜனதா கட்சிக்கோ, எனக்கோ, எந்த ஒரு கட்சியின் மீதோ, எந்த ஒரு தலைவரின் மீதோ எந்த ஒரு கோபமோ ஆதங்கமோ இல்லை என குறிப்பிட்டார். எல்லா கட்சியினரும் அவர்கள் கட்சி வளர வேண்டும் என்று நினைப்பார்கள், இருந்தாலும் அதுதான் தர்மம். கூட்டணி கட்சியில் இருக்கிறார்கள் அவர்கள் வளர வேண்டும் என்று நினைப்பதில் எந்த தவறும் இல்லை. அதேநேரத்தில் நாமும் வளர வேண்டும் தமிழக மக்களின் அன்பை பெற வேண்டும் என்று நினைப்பதும் தவறு. இந்த மாதிரி நினைக்கும்போது கூட்டணி கட்சிக்குள் ஒருசில சிராய்வுகள், உரசல்கள் வருவது சகஜம் தான். பாஜக வேகமாக வளர வேண்டும் என்ற முன்னெடுப்புகளில் இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

முதலமைச்சர் ஜனநாயகம் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை

இறுதியாக, ராகுல் காந்தி சிறை தண்டனை உத்தரவு ஜனநாயகத்தை நசுக்கும் விதமாக இருக்கிறது என்று பதிவிட்டிருந்த முதலமைச்சர் பற்றி கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதிலளித்த அண்ணாமலை, ஜனநாயகத்தைப் பற்றி பேசுவதற்கு முதலமைச்சருக்கு எந்த தகுதியும் இல்லை.  இணையத்தில் ட்ரோல் வீடியோக்களை போடுபவர்களையெல்லாம் கைது செய்து சிறையிலடைக்கும் இந்த முதலமைச்சர் ஜனநாயகத்தைப் பற்றி பேசுவது நகைப்பு. மணீஷ் சிசோடியா கைதை குறிப்பிட்டு பேசிய அண்ணாமலை, சிசோடியா கைதை காங்கிரஸ் கட்சி வரவேற்க்கிறது, அதே கூட்டணியில் இருக்கக்கூடிய திமுக எதிர்க்கிறது இதுதான் அவர்களின் லட்சணம் என்று பேசியிருக்கிறார்.