உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முன்னர் இ.பி.எஸ். எங்கு சென்றார் தெரியுமா? 

EPS

அதிமுக பொதுக்குழு மற்றும் இடைக்கால பொதுச் செயலாளர் தொடர்பான வழக்குகளின் தீர்ப்பு இன்று உச்சநீதிமன்றத்தில் வருவதற்கு முன்னர் எடப்பாடி சென்ற இடம் குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார். 

அதிமுக பொதுக்குழு வழக்கு

அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (23-02-2023) தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு, ஜூலை 11ம் தேதியன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்றது. 

ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ரஞ்சித்குமார், குருகிருஷ்ணகுமார் ஆகியோரும், இபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யமா சுந்தரமும் ஆஜராகி வாதிட்டனர்.அதேபோல அதிமுக அவைத்தலைவர் மற்றும் அதிமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன், முகுல் ரோஹ்தகி ஆகியோரும் ஆஜராகி வாதிட்டிருந்தனர். 

ஓபிஎஸ் தரப்பில் 2022 ஜூலை 11 அன்று நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு சட்டரீதியாக செல்லாது என வாதிடப்பட்டது. அதே போல இபிஎஸ் தரப்பில், ஏற்கெனவே ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியபோது என்ன வழிமுறைகள் பின்பற்றப்பட்டதோ அதே வழிமுறைதான் இடைக்கால பொதுச்செயலாளரை தேர்வு செய்தபோதும் பின்பற்றப்பட்டுள்ளது. இரட்டைத் தலைமையால் கட்சிக்குள் ஒருமித்த முடிவை எடுக்க முடியவில்லை. அது கட்சிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதால்தான் ஒற்றைத் தலைமை வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது என வாதிட்டனர்.  

மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு உள்ளது என்றால் அதை ரத்து செய்துவிட்டு இடைக்கால பொதுச்செயலாளரை உருவாக்கும் அதிகாரமும் பொதுக்குழுவுக்கு உள்ளது. அதன் அடிப்படையிலேயே அதிமுக பொதுக்குழு கூட்டம் சட்டப்படி செல்லும், என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஓபிஎஸ்க்கு தற்போது கட்சிக்குள் பெரும்பான்மையோ செல்வாக்கோ இல்லை எனவும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். 

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர். இந்நிலையில் ஜூலை 11 அன்று நடந்த பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு சரியா தவறா என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. 

இபிஎஸ் வசம் அதிமுக 

அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அம்சங்கள்: 

*11.07.2022 அன்று பொதுக்குழு கூடியதை விசாரித்தோம். எதிர் தரப்பினரது கருத்துகள் முழுமையாக கேட்கப்பட்டது. 

*இபிஎஸ் தலைமையில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும். 

*சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் வழங்கிய உத்தரவை உறுதி செய்கிறோம். 

*உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் வசமானது அதிமுக.

*ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் செல்லும். 

*அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் செயல்படலாம் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

*உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது செல்லும். 

தீர்ப்புக்கு முன்

இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய பொருளாளருமான ஆர்.பி.உதயகுமார் ஏற்பாடு செய்த 51 ஜோடிகளுக்கான திருமணம் இன்று மதுரையில் நடைபெற்றது. இந்த திருமண விழாவிற்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி நடத்தினார். அப்போது மணமக்களை வாழ்த்தி பேசிய எடப்பாடி, திருமண விழாவாக இருந்தாலும், நான் நேற்று இரவு முழுவதும் தூங்கவில்லை. இன்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வரவிருக்கிறது என்பதால் அதைக்குறித்தே எனது மனம் சிந்தித்துக்கொண்டிருந்து. என்னால் நிம்மதியாக் இருக்க முடியவில்லை எனக் கூறினார். 

எடப்பாடி எங்கு சென்றார்?

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஆர்.பி.உதயகுமார், புரட்சித் தலைவி அம்மாவிற்கென்று இங்கே ஒரு கோயிலை கட்டியுள்ளார். திருமண மேடைக்கு செல்வதற்கு முன் அந்த கோயிலுக்கு சென்று வரலாம் என என்னிடம் கூறினார். நாங்களும் அந்த கோயிலுக்கு சென்றோம், அங்கு எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தெய்வங்களாக இருந்து நம்மை வழிநடத்துகின்றனர். இன்றைய நாளிலே நல்ல தீர்ப்பு நமக்கு கிடைக்க வேண்டும் தெய்வமே என அம்மாவிடம் வேண்டினேன். அதைப்போல சில மணி நேரங்களிலேயே நமக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இருபெரும் தலைவர்களும் அருள் கொடுத்த சில நிமிடங்களிலேயே அற்புதமான செய்தி வந்துள்ளது எனவும் பழனிசாமி மகிழ்ச்சி பொங்க பேசினார்.