இறுதிப்போட்டிக்கு செல்லும் அணி எது ? - சென்னை குஜராத் அணிகள் இன்று மோதல் 

csk vs gt

இறுதி கட்டத்தில் 16 வது ஐபிஎல்

உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற 16 வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். அதன்படி, லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில், குஜராத், சென்னை, லக்னோ, மும்பை அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. இதில், முதல் இரு இடங்களில் உள்ள அணிகள் இறுதிப்போட்டிக்கான முதல் தகுதி சுற்றில் விளையாடும், அதில், வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு முன்னேறும். தோற்கும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும். அதன்படி வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியும் முதல் தகுதி சுற்றில் தோற்கும் அணியுடன் மோத வேண்டும். இதில், வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் விளையாடும் என்பது விதி. அதன்படி, புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத அணியும், 2 வது இடத்தில் உள்ள சென்னை அணியும் மோத உள்ளது. 

தோனி தலமையிலான மஞ்சள் படை 

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சென்னை மட்டுமல்லாது, விளையாடும் அனைத்து மைதானங்களிலும் ரசிகர்படை இருந்து வருகிறது. இந்த தொடரில் 14 ஆட்டங்களில் விளையாடி 8 ல் வெற்றியும் 5 ல் தோல்வியும் ஒரு ஆட்டம் மழையார் ரத்தானது. சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் டிவான் கான்வே (6 அரைசதத்துடன் 585 ரன்), ருதுராஜ் கெய்க்வாட் (504 ரன்) பேட்டிங்கில் முதுகெலும்பாக திகழ்கிறார்கள். இவர்களின் தொடக்க ஆட்டம் அணிக்கு முக்கியமானதாக அமையும். மிடில் வரிசையில் களமிறங்கும் ரஹானே, ஷிவம் துபே, மொயீன் அலி ஆகியோரும் நல்ல பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் ஜடேஜா (17 விக்கெட்), துஷர் தேஷ்பாண்டே (20 விக்கெட்),  பதிரானா (15 விக்கெட்) ஆகியோரும் அணிக்கும் வலு சேர்க்கிறார்கள். உள்ளூரில் ஆடுவது சென்னை அணிக்கு சாதகமான விஷயமாகும். இந்த சீசனில் சொந்த ஊரில் சிஎஸ்கே  விளையாடும் கடைசி போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. 

அசுர பலம் வாய்ந்த குஜராத்

குஜராத் அணியை பொறுத்தவரை இந்த சீசனில் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் 10 வெற்றி, 4 தோல்வி என்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. குஜராத் அணியில் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் (2 சதத்துடன் 680 ரன்), டேவிட் மில்லர், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, விருத்திமான் சஹா, விஜய் சங்கர் மற்றும் பவுலர்கள் ரஷித்கான் (24 விக்கெட்), இந்த சீசனில் சிறந்த பந்து வீச்சுக்காக பர்பிள் தொப்பி வைத்திருக்கும் முகமது ஷமி (24 விக்கெட்), நூர் அகமது ஆகியோர் சிறந்த பங்களிப்பை அளித்து வருகின்றனர். கடைசியாக நடந்த 5 போட்டிகளில் 4 ல் வெற்றி பெற்று பலம் வாய்ந்த அணியாக வலம் வருகிறது. குஜராத் அணி, லீக்கில் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதே போல் கடந்த ஆண்டில் 2 முறை சென்னையை தோற்கடித்தது. அதாவது சென்னை அணி இதுவரை குஜராத்தை வென்றது கிடையாது.

பரபரப்புக்கு பஞ்சமில்லாத போட்டி

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் குஜராத டைட்டன்ஸ் அணி அசுர பலத்துடன் வலம் வரும் சென்னை அணிக்கு சவாலாக இருக்கக் கூடும். அதேசமயம் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேற குஜராத் முழு முயற்சி எடுக்கும். இன்றைய ஆட்டத்தில் குஜராத்தின் ஆதிக்கத்துக்கு முடிவுகட்டி 10-வது முறையாக சென்னை அணி இறுதிப்போட்டிக்குள் கால்பதிக்குமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.