நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம்.. மாற்றத்தை ஏற்படுத்துமா தமிழக அரசியல் களத்தில்.?

vijay poli

விஜய் மக்கள் இயக்கம் பற்றியான பேச்சுக்கள், அவர்களின் செயல்பாடுகள், முன்னெடுப்புகள் என தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே அதிகம் பேசப்பட்டு வருகின்றன. இதெல்லாம் நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு போடும் அச்சாரம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்து வந்தனர். நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு இரண்டடியில் தோண்டப்பட்ட அச்சாரம் அல்ல அது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மூலை முடுக்குகளுக்கும் ஊடுருவிச் செல்லும் விதமாக போடப்பட்ட ஆலமரத்தின் விதைதான் அது, என்று காலப்போக்கில் விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகளால் அறிய முடிந்தது. இன்றைக்கு நடிகர் விஜயின் அரசியல் பாதைக்கு வித்திட்ட விஜய் மக்கள் இயக்கங்களின் செயல்பாடுகளை பற்றி இங்கே பார்க்க வேண்டியிருக்கிறது. 

தமிழ்நாட்டில் நடிகர்களாக மக்கள் மனங்களை கவர்ந்து, அரசியலிலும் மக்கள் மனங்களை வென்று சினிமாவில் மட்டுமல்லாது அரசியலிலும் கால் பதித்தவர்கள் உண்டு. அதேநிலையில், சினிமாவில் மக்கள் மனங்களைக் கவர்ந்து, அரசியலில் கோட்டை விட்டவர்களும் உண்டு. நடிப்பிற்கு பேர்போன சிவாஜியை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள், ஒரு கலைஞனாகவே தவிர, தலைவனாக அல்ல. ஆனால், எம்ஜிஆர்-ஐ மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். காரணம், தான் நடித்த படங்களில் உழைக்கும் வர்க்கத்தின் வாழ்வியலை படங்கள் மூலமாக மக்கள் மனதில் விதைத்து, மக்கள் மனங்களை வென்றார் என்றால் அது மிகையல்ல. 

அதேபோல், எம்ஜிஆர்-க்கு அடுத்தபடியாக நடிகர் விஜயகாந்த் 'கருப்பு எம்ஜிஆர்' என்றே மக்களால் அழைக்கப்பட்டார். எம்ஜிஆரின் சாயலை மாறாமல் பின்பற்றியதன் விளைவே எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிக்கப்பட்டார். அதற்குபின் வந்த நடிகர் பாக்யராஜ், கார்த்தி, உள்ளிட்டோர் இருக்கும் இடம் தெரியாமல் போனதன் வரலாறும் உண்டு. 

ஆனால், தற்போது நடிகர்களின் வரிசையில் நிற்கும் நடிகர் விஜயின் அரசியலுக்கு வரவேற்பு கம்பளம் விரித்து அழைக்கும் அளவிற்கு இன்றைய அரசியல் களம் இருக்கிறதென்றால், விஜய்க்கு இருக்கும் இளைஞர்கள் பட்டாளம் ஒரு காரணம். இன்றைய சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர் என்றால் அது விஜய். இதன்மூலம் விஜய் மக்கள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு, கிராமங்கள் தோறும் கிளைகளை பரப்பியதில் இருந்து முக்கியத்துவம் பெறுகிறார் நடிகர் விஜய். நடிகர் விஜயகாந்த் கூட கிராமம் தோறும் ரசிகர் மன்றங்களை தோற்றுவித்து, தன்னுடைய கொடியை பட்டி தொட்டியெல்லாம் பறக்கவிட்டார், அதன்மூலம், தன்னுடைய அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்தார். 

தற்போது அதேநிலையில், நடிகர் விஜய் மக்கள் இயக்கம் மூலம் ரத்ததானம், கல்வி உதவி, தலைவர்களை கெளரவித்தல், அன்னதானம் வழங்குதல், மாணவர்களை கெளரவித்தல் உள்ளிட்ட செயல்பாடுகளால் தமிழக அரசியல் வருகைக்கு ஒரு பதிவெண்ணை பதிந்துவிட்டு சென்றிருக்கிறார் நடிகர் விஜய். 

நடிகர் விஜய் கடந்த சில தினங்களுக்கு முன்பு 10 மற்றும் 12-ம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் விதமாக, சான்றிதழ், ஊக்கத்தொகை அளித்து மேடையில் பேசியது, வருங்கால தமிழக அரசியலின் பாதையை மாற்றி அமைக்கும் ஒரு நிகழ்வாகவே பார்க்கப்பட்டது. நடிகர் விஜய் அந்த நிகழ்ச்சியில் வோட்டு அரசியல், பணப்பட்டுவாடா, ஊழல் பற்றியெல்லாம் பேசியிருந்தது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியது. நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்தையடுத்து, அவரை தங்களுடைய கட்சிக்கு வருமாறு அழைப்பவர்களும், நடிகர் விஜயின் அரசியல் நுழைவை விமர்சனம் செய்தும் வருகிறார்கள் என்றால், இங்கே நடிகர் விஜயின் அரசியல் வருகைக்கு ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது என்றே பார்க்க முடிகிறது. நடிகர் விஜய், நடிகர்களின் வரிசையில் தமிழக அரசியலில் இடம்பிடித்துவிட்டார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.. தமிழக அரசியல் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...