உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா..

wee

பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்ற இந்தியா

இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதியது. இதில், 3 போட்டிகளில் இந்திய அணி 2-1 என வெற்றி பெற்றிருந்தது. 

இந்தியா, ஆஸ்திரேலியா இடையே நான்காவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான நிலையில் அகமதாபாத்தில்  நடந்து  முடிந்தது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்று, பார்டர்-கவாஸ்கர் டிராபியை  தக்கவைத்துள்ளது. இதன் மூலம்  ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ந்து 16-வது டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.   

இமாலய இலக்கை நிர்ணயித்த ஆஸ்திரேலியா

இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்க ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட் 32 (44), ஸ்டீவ் ஸ்மித் 38 (135) என நிதானமான துவக்கத்தை ஆஸ்திரேலிய அணிக்கு கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து உஸ்மான் கவாஜா 180 (422), கேமரூன் கிரீன் 114 (170) ஆகியோர் சிறப்பாக விளையாடி இந்திய பந்துவீச்சை சமாளித்து  பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை குவித்து அசத்தினர். பின்னர், இறுதிக் கட்டத்தில் நாதன் லைன் 34 (96), டோட் மர்பி 41 (61) இருவரும் தேவையான நேரத்தில் ரன்களை குவித்ததால், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 480/10 என்ற இமாலய இலக்கை இந்தியாவிற்கு எதிராக அமைத்தது.

டெஸ்ட் போட்டியில் 1,206 நாட்களுக்குப் பிறகு சதம்

முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தர். சுப்மன் கில் நிதானமாக ஆடி 128 ரன்களை குவித்து அணிக்கு பலம் சேர்த்தார். சேத்தஸ்வர் புஜாரா தனது பங்கிற்கு 59 ரன்கள் எடுத்தார். இவர்களை தொடர்ந்து நட்சத்திர வீரர் விராட் கோலி சிறப்பாக விளையாடி டெஸ்ட் போட்டியில் 1,206 நாட்களுக்குப் பிறகு தனது சதத்தை பூர்த்தி செய்தார்.

இதனைத் தொடர்ந்து, கோலியின் ஆட்டம் வேகமெடுக்கத் தொடங்கியது. இரட்டை சதம் அடிக்கும் வேகத்தில்  விளையாடி வந்த விராட் கோலி 186 (364) ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ஸ்ரீகர் பரத் 44 (88), அக்சர் படேல் 79 (113) என்று தங்களது பங்கிற்கு நல்ல ரன்களை அணிக்குச் சேர்த்திருந்ததால், இந்திய அணி முதல் இன்னிங்ஸின் முடிவில் 571/10 ரன்களை குவித்து, ஆஸ்திரேலியாவைவிட 91 ரன்கள் முன்னிலை பெற்றது.

இறுதிப் போட்டியில் இந்தியா

இந்த போட்டி  பெரும்பாலும் டிரா ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவ்வாறே இப்போட்டி இன்றைய தினம் டிராவில் முடிந்தது. இன்றைய நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 78.1 ஓவரில் 175/2 ரன்களை எடுத்த  நிலையில் ஆட்டம் டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது, நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இலங்கை அணி தோல்வி அடைந்துள்ளது. இதன்காரணமாக, இந்திய அணி புள்ளிகள் அடிப்படையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோதும். இந்த முடிவினால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.