மல்யுத்த வீரர் வீராங்கனைகள் கைது.. மார்ஃபிங் செய்யப்பட்ட போட்டோ.. தலைவர்கள் கண்டனம்.!

wrestr

இந்திய மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கைது செய்யப்பட்டதையடுத்து, தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் போராட்டம்
 
இந்திய மல்யுத்த வீராங்கனைகளிடம் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக உள்ளவர் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் சாக்சி மாலிக், வினேஷ் போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இருப்பினும், விசாரணைக் குழு அமைக்கப்பட்ட பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதை கண்டித்து இம்மாத தொடக்கத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் போராட்டம் தொடங்கினர்.

கைது

நேற்று புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்ட நிலையில், வினேஷ் போகத், சாக்சி மாலிக், பஜ்ரங் பூனியா உள்ளிட்ட வீரர், வீராங்கனைகள் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர். ஆனால், அவர்களை டெல்லி போலீஸார் வழியிலேயே தடுத்து நிறுத்தினர். பாதுகாப்பு தடுப்புகளை தாண்டி அவர்கள் செல்ல முயன்றதால், போலீஸாருக்கும், வீரர், வீராங்கனைகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீஸார் அவர்களை பேருந்தில் ஏற்றி வேறு இடத்துக்கு அழைத்துச் சென்று தங்கவைத்தனர். 

மார்ஃபிங் செய்யப்பட்ட போட்டோ

கைதான வீராங்கனைகளில் சங்கீதா போகட் மற்றும் வினீஷ் போகட் காவல்துறை வாகனத்தில் சிரித்துக் கொண்டே அமர்ந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, அந்த புகைப்படங்கள் மார்ஃபிங் செய்யப்பட்டது என்று பஜ்ரங் புனியா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். 

தலைவர்கள் கண்டனம் 

மல்யுத்த வீராங்கனைகள் கைது செய்யப்பட்டதையடுத்து, தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். "டிசூட்டு விழா முடிந்ததும் மக்களின் குரல்களை நசுக்கும் பணி தொடங்கியுள்ளது" என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், "மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் நெஞ்சில் இருக்கும் பதக்கங்களால் நம்நாட்டிற்கு பெருமை என்றும், மல்யுத்த வீராங்கனைகள் குரல் மிதிக்கப்படுவதாகவும்" காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது" என்று விமர்சனம் செய்துள்ளார். "மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் டெல்லி காவல்துறை நடந்து கொண்ட விதம் மனவேதனை அளிக்கிறது" என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கண்டனம் தெரிவித்துள்ளார். "போராட்டத்தில் ஈடுபட்ட, மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கைது செய்யப்பட்ட விதம் வேதனை தருகிறது என்றும், மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் விஷயத்தை சிறந்த முறையில் கையாண்டிருக்க வேண்டும்" என்றும் நீரஜ் சோப்ரா வேதனை தெரிவித்துள்ளார்.