மல்யுத்த வீரர்கள் தொடர் போராட்டம் - இந்திய அரசுக்கு சர்வதேச மல்யுத்த அமைப்பு கண்டனம்

indian wrestlers

பாஜக எம்.பி மீதான பாலியல் புகார் 

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள் கடந்த ஏப்ரல் 23-ந்தேதி முதல் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறப்பு விழாவையொட்டி நாடாளுமன்றம் நோக்கி மல்யுத்த வீரர்கள் பேரணியாக செல்ல முயன்றனர். இதை போலீசார் தடுத்ததை அடுத்து இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பஜ்ரங் புனியா மற்றும் சாக்சி மாலிக் உள்ளிட்டோர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக 700 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

பதக்கங்களை வீசுவோம்

இந்நிலையில், போட்டிகளில் நாட்டிற்காக வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போவதாக, மல்யுத்த வீரர்கள் அறிவித்திருந்தனர். ஹரித்வாருக்கு பேரணியாக சென்று மாலை 6 மணிக்கு நதியில் பதக்கங்களை வீசுவோம் எனக் கூறியுள்ளனர். மேலும், பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும்  பிரிஜ்பூஷன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அரசுக்கு 5 நாட்கள் கெடு விதித்திருந்தனர். 

சர்வதேச மல்யுத்த அமைப்பு கண்டனம்

மல்யுத்த வீரர்களின் கைதுக்கு சர்வதேச மல்யுத்த அமைப்பு கண்டனம் இந்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. பிரிஜ் பூஷனுக்கு எதிரான விசாரணையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது எமாற்றம் அளிக்கிறது என்றும், பிரிஜ்பூஷனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பாரபட்சமின்றி விசாரிக்கப்பட வேண்டும் என்றும் உலக மல்யுத்த அமைப்பு வலியுறுத்தி உள்ளது. மேலும் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களுடன் விரைவில் ஆலோசனை நடத்துவோம் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், விளையாட்டு அமைச்சகம் விடுத்துள்ள 45 நாட்கள் கெடுவுக்குள் இந்திய மல்யுத்த சம்மேளன செயற்குழு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் தவறினால், இந்திய மல்யுத்த அமைப்பை சஸ்பெண்ட் செய்து, வீரர்கள் தனிக் கொடியின் கீழ் விளையாட சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பு வழிவகை செய்யும் என தெரிவித்துள்ளது. 

அண்ணாமலையின் சர்ச்சைக் கருத்து

இந்நிலையில், மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேட்டியளித்த அவர், வழக்கு விசாரணை உச்சநீதி மன்றத்தில் இருக்கும் போது, வீரர்கள் போராட்டம் நடத்துவது தவறு என்று விமர்சித்துள்ள அண்ணாமலை,  உச்சநீதி மன்றத்தின் மீது வீரர்களுக்கு நம்பிக்கை இல்லையா? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார். அண்ணாமலையின் இந்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.