அன்புமணி கைது.. கலவர பூமியான என்.எல்.சி. வளாகம்.!   

nlc kaithu

என்.எல்.சி.க்கு எதிரான கண்டனக்குரல்

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் வளையமாதேவி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் பயிரிடப்பட்ட நெல் வயல்களில் இராட்சத வாகனங்கள் மூலம் நெற்பயிர்களை அழித்தது என்.எல்.சி. நிர்வாகம். என்.எல்.சி.விரிவாக்க பணிக்காக விளைநிலங்களை கையகப்படுத்துகிறோம் என்ற பெயரில் விளைநிலங்களை நாசம் செய்தது  என்.எல்.சி. நிர்வாகம்.  என்.எல்.சி. நிர்வாகத்தின் செயல்பாடுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டனக்குரல்கள் எழுந்தன.

அன்புமணி தலைமையில் போராட்டம்

என்.எல்.சியின் விரிவாக்க பணிக்காக விளைநிலங்களை கையகப்படுத்துவதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தை அறிவித்திருந்தது பாட்டாளி மக்கள் கட்சி. அதேபோல், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று நெய்வேலி வளாகத்திற்கு முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திக்கொண்டிருந்தபோது, பாமகவினர் என்.எல்.சி அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனர்.   

கலவர பூமியான என்.எல்.சி. வளாகம்

அப்போது, காவல்துறையினர் மற்றும் பாமகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் காவல்துறையினரால்  கைது செய்யப்பட்டு காவல்துறை வாகனத்தில் ஏற்றப்பட்டார். அதை எதிர்த்து, பாமகவினர் காவல்துறை வாகனத்தை அடித்து நொறுக்கினர். காவல்துறை வாகனத்தை பாமகவினர் தாக்கியதால் என்.எல்.சி. வளாகம் கலவர பூமியாக மாறியது. 

வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு 

பாமக தொண்டர்கள் மீது காவல்துறையினர் தடியடி தாக்குதல் நடத்தியநிலையில், பாமகவினர் தண்ணீர் பாட்டில்கள், கொடிக்கம்பங்களை காவல்துறையினர் மீது வீசினர். போராட்டக்காரகளை கட்டுப்படுத்த காவல்துறையினர் வஜ்ரா வாகனத்தின் மூலம் தண்ணீரை பீய்ச்சி கூட்டத்தை கலைத்தனர். மேலும்,  தொடர்ந்து காவல்துறையினர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு கூட்டத்தை கலைக்க முற்பட்டனர்.  

என்.எல்.சி. நிர்வாகம் இருக்கக்கூடாது

இதையடுத்து, கைது செய்யப்பட்ட வாகனத்திலிருந்து பத்திரிக்கையாளர்களிடம் பரபரப்பாக பேட்டி அளித்தார் பாமக தலைவர் அன்புமணி. அப்போது பேசிய அவர், "விளைநிலங்களை என்.எல்.சி. நிர்வாகத்திற்கு எடுத்துக் கொடுக்கக்கூடாது. தமிழகத்தில் என்.எல்.சி.நிர்வாகம் 66 ஆண்டு காலம் இயங்கி கடலூர் மாவட்டத்தையே அழித்துவிட்டது. 8 அடியில் இருந்த நிலத்தடி நீர் இன்று 800 அடி அளவிற்கு சென்றுவிட்டது, இதற்கு காரணம் என்.எல்.சி. உள்ளூர் மக்களுக்கு வேலை கிடையாது, தொடர்ச்சியாக அழித்துக்கொண்டிருக்கிற என்.எல்.சி. நிர்வாகம் இருக்கக்கூடாது. 

என்.எல்.சி.க்கு உடந்தையாக திமுக செயல்படுவது ஏன்?

தமிழகம் இன்று மின்மிகை மாநிலமாக மாறியிருக்கிறது. மின்சாரம் தயாரிப்பதற்கு எத்தனையோ வழி இருக்கிறது. ஆனால், சோறுக்கு ஒரேவழி நிலம்தான். அந்த நிலத்தை பாதுகாக்கத்தான் இன்று நாங்கள் போராடி வருகிறோம். பாஜக-வை எல்லா விதத்திலும் எதிர்க்கும் திமுக அரசு என்.எல்.சி.க்கு ஏன் உடந்தையாக செயல்படுகிறது. நிலங்களை கையகப்படுத்தி என்.எல்.சி.க்கு ஒப்படைப்பது ஏன்?" என கேள்வி எழுப்பினார்.