இபிஎஸ்-க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு.. 

dududk

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தநிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது. 

டெண்டரில் முறைகேடு!

கடந்த அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த தற்போதைய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத் துறையில் 4,800 கோடி ரூபாயில் டெண்டர் விடப்பட்டது. அந்த டெண்டரை எடப்பாடிக்குச் சொந்தமான உறவினர்களுக்கு விடப்பட்டதாகவும், அதனால், அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் இதனை சிறப்பு விசாரணைக்குழு மூலம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார். 

உச்சநீதிமன்றம் உத்தரவு

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது. இதனை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அப்போது, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும், இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

ரத்து செய்த உயர்நீதிமன்றம்

அந்த உத்தரவைத்தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் அந்த வழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரிக்கத் தொடங்கியது. இந்த வழக்கின் தீர்ப்பில், இந்த விவகாரத்தில் புதிதாக விசாரணை எதுவும் நடத்தவேண்டியதில்லை என்றும், ஆரம்பகட்ட விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை சரியாகத்தான் செய்திருக்கிறார்கள் என்றும் அதில் தவறு எதுவும் இல்லை என்றும் கருத்து தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்திற்காக எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க தேவையில்லை என்றுகூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். 

லஞ்சஒழிப்புத்துறை மேல்முறையீடு

சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்த நிலையில், டெண்டர் முறைகேடு தொடர்பான எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையினரால் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. மேல்முறையீடு மனு தாக்கல் செய்யும்போது தனது தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என இபிஎஸ் தரப்பில் ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.