குஜராத் கலவரத்தில்

கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணின் மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம் 

Bilkis Bano

குஜராத் கலவரத்தில் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பில்கிஸ் பானு தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம். 

கோத்ரா ரயில் தீ விபத்து

குஜராத் மாநில முதலமைச்சராக நரேந்திர மோடி முதல்முறையாக கடந்த 2001ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றிப்பெற்று பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற 5 மாதாங்களில் 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியிலிருந்து குஜராத்துக்கு சபர்மதி ரயில் வந்தது. அவ்வாறு வரும்போது கோத்ரா என்ற பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த தீ விபத்தில் 59 இந்து பக்தர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 2005ம் ஆண்டு மத்திய அரசு அமைத்த விசாரணை ஆணையம் நடத்திய விசாரணையில், ரயில் பெட்டியில் சமயல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்தினாலோ ரயில் தீப்பற்றி எரிந்ததாகவும், எந்த ஒரு தனி நபரோ அல்லது குழுவோ, ரயிலை எரிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தீ விபத்தை ஏற்படுத்தவில்லை என அறிக்கை தாக்கல் செய்தது. 

கோத்ரா கலவரம் 

ஆனால் ரயில் விபத்து ஏற்பட்ட பிப்ரவரி மாதம் 27ம் தேதி அன்று, அந்த பகுதி முழுவதும், இஸ்லாமியர்களே ரயிலுக்கு தீ வைத்து இந்துக்கள் 59 பேரை கொன்று விட்டதாக தகவல் பரப்பட்டது. இந்த தகவலால் உந்தப்பட்ட இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களில் சிலர், இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் கோத்ரா பகுதியில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. சுமார் இரண்டு வார காலம் தொடர்ந்து நடைபெற்ற இந்த கொடூர கலவரத்தில் 20,000 இஸ்லாமியர்களின் உடமைகள், வீடுகள், கடைகள் மற்றும் சொத்துக்கள் சூறையாடப்பட்டு தீயிட்டு அழிக்கப்பட்டன. 360 மசூதிகளும் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டன, சுமார் 1,50,000 மக்கள் உயிருக்கு பயந்து வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர். அரசு தகவலின்படி, 790 இஸ்லாமியர்களும், 254 இந்துக்களும் கொல்லப்பட்டனர். இந்த கலவரம் தொடர்பாக ஆய்வு நடத்திய மனித உரிமைகள் ஆணையம் இதில் 2000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல் தெரிவித்தது. 

பில்கிஸ் பானு வன்முறை 

இந்த கலவரத்தின்போது பில்கிஸ் பானுவிற்கு 21 வயது மற்றும் 5 மாதம் கர்ப்பமாக இருந்தார். ஆனால் கர்ப்பிணி என்றும் பாராமல் பில்கிஸ் பானுவை இந்து அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் கொடூரமாக தாக்கி பாலியல் வன்புணர்வு செய்தனர். மேலும் பில்கிஸ் பானுவின் 3 வயது குழந்தை உட்பட 7 உறவினர்களை கொன்றனர். மேலும் கோத்ரா பகுதியில் பல இஸ்லாமிய பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இதில் பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு மும்பை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு 2008ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டணை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் இந்த தீர்ப்பு மேல் முறையீட்டின்போது மும்பை உயர்நீதிமன்றத்தாலும், உச்சநீதிமன்றத்தாலும் உறுதி செய்யப்பட்டது. 

குற்றவாளிகள் விடுதலை

இந்நிலையில் 2022ம் ஆண்டு மேமாதம் 13ம் தேதி குஜராத் நீதிபதிகளான அஜய் ரஸ்தோகி மற்றும் விக்ரம் நாத் தலைமையிலான பெஞ்ச், 1992ம் ஆண்டு குஜராத் சட்டத்தின்படி பில்கிஸ்பானு வழக்கின் 11 குற்றவாளிகளையும் நன்னடத்தையின் அடிப்படையில் தண்டனை காலம் முடிவதற்கு முன்பாகப்வே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு 11 குற்றவாளிகளையும் பாஜக தலைமையிலான குஜராத் அரசு விடுதலை செய்தது. 

பில்கிஸ் பானு மேல்முறையீடு 

தன்னை பாலியல் வன்கொடுமை செய்த 11 குற்றவாளிகளையும், தண்டனைக் காலம் முடிவதற்கு முன்னரே விடுதலை செய்த குஜராத் அரசின் உத்தரவிற்கு மறுசீராய்வு செய்ய வலியுறுத்தியும், மும்பை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மீது குஜராத் நீதிமன்றமும் அரசும் தலையிடமுடியாது எனக்கூறியும் உச்சநீதிமன்றத்தில் பில்கிஸ் பானு மறு சீராய்வு மனு தாக்கல் செய்தார்.

உச்சநீதிமன்றம் உத்தரவு

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தநிலையில், 1992ம் ஆண்டு குஜராத் அரசின் சட்டத்தின்படி பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய உரிமையுள்ளத்து எனக்கூறி பில்கிஸ் பானுவின் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.