"தமிழகத்தில் மத மோதலை ஏற்படுத்த ஆளுநர் மூலம் பாஜக முயற்சி.." கபில்சிபல் குற்றச்சாட்டு.! 

kabil sibal

தமிழகத்தில் மத மோதலை ஏற்படுத்தவே ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக அனுப்பியுள்ளது என்று மூத்த வழக்கறிஞர் எம்.பி. கபில் சிபல் குற்றம் சாட்டியிருக்கிறார்.  

அகில இந்திய காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தற்போது அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியில் இணைந்து, தற்போது  மாநிலங்களவை உறுப்பினராகவும், மூத்த வழக்கறிஞராக இருந்தவரும் தான் கபில்சிபல். காங்கிரஸில் இருந்து விலகினாலும், காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியின் ஆதரவு நிலைப்பாட்டையும் எடுத்து வருகிறார். இந்தநிலையில், சனாதன சர்ச்சை தொடர்பான ஏ.என்.ஐ செய்தியாளரின் கேள்விக்கு கபில்சிபல் பதில் அளித்திருக்கிறார். 

ஆளுநர் என்ன செய்கிறார் என்பது அவர்களுக்கு தெரியும்

அதில், "தமிழ்நாட்டின் ஆளுநராக இருக்கக்கூடிய ஆர்.என்.ரவி தமிழ்நாட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை பிரதமர் மோடியிடமும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் கேட்க விரும்புகிறேன். என்னைப்பொருத்தவரையில், தமிழ்நாட்டில் ஆளுநர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஏனென்றால் அதை செய்யச்சொல்வதே அவர்களாகத்தான் இருக்கிறார்கள்.  

ஆளுநரை முன்வைத்து மத அரசியல்

தமிழகத்தில் மதரீதியிலான மோதல்கள் இதுவரை நிகழ்ந்ததில்லை. தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத்தான் இருந்து வந்தது. அங்கு பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்களெல்லாம் ஆட்சி நடத்தியிருக்கிறார்கள். அப்படியான சூழலில் கூட எந்தவொரு பிரச்னையும் ஏற்பட்டது இல்லை. ஆனால், தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவியை முன்வைத்து மதத்தின் அடிப்படையில் சர்ச்சைகளை உருவாக்கி சட்டம் ஒழுங்கை ஏற்படுத்த வேண்டும் என்பதைத்தான் இவர்கள் குறிக்கோளாக கொண்டிருக்கிறார்கள்.

உத்தரப்பிரதேசத்தில் செய்ததை தமிழ்நாட்டில் செய்ய முயற்சிக்கிறார்கள்

பாஜகவின் அரசியல் திட்டத்தை ஆளுநர் ரவிதான் முன்னெடுத்து செல்கிறார். மதம் சார்ந்த பிரச்னைகளை எழுப்பக்கூடிய இவர்கள்தான் மிக முக்கியமான குற்றவாளிகள். உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இவ்வளவு நாட்களாக என்ன மாதிரியான மத அரசியலை செய்து வந்தார்களோ, அதே அரசியலை தற்போது தமிழ்நாட்டிலும் செய்ய பாஜக முயற்சி செய்கிறது" என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.