திரிபுரா மாநில தேர்தல் - பாஜக தேர்தல் அறிக்கை 

JP Nadda

திரிபுரா மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக தலைவர் நட்டா மற்றும் திரிபுரா முதலமைச்சர் மானிக் சாஹா ஆகியோர் வெளியிட்டனர். 

திரிபுரா சட்டமன்ற தேர்தல் 

திரிபுரா மாநிலத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 16ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, இந்திய தேசிய காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் திர்புரா மோத்தா கட்சி ஆகியவை ஏற்கென தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தீவிர பிராச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். திரிபுராவில் ஆளும் கட்சியான பாஜக தனது தேர்தல் அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. 

வெறும் காகிதம் அல்ல

தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தேர்தல் அறிக்கை என்பது வெறும் வெற்றுக் காகிதம் அல்ல, மாறாக இது திரிபுரா மக்கள் மீது பாஜக வைத்திருக்கும் அர்ப்பணிப்பு என தெரிவித்தார். மேலும் தான் திரிபுராவிற்கு வரும்போதெல்லாம் தனக்கு புதிய சக்தி கிடைப்பதாகக் கூறிய அவர், பிரதமர் மோடியின் தலைமையில் கீழ் நாடு வளர்ச்சிப்பாதையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது எனத் தெரிவித்தார். மேலும் திரிபுராவின் வளர்ச்சியும், வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியும் மிக முக்கியமானது எனவும் நட்டா கூறினார். 

பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற இலவசங்கள்

1. அனைத்து பயனாளிகளுக்கும் இலவச சிலிண்டர் வழங்கப்படும். 

2. நிலம் இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கப்படும். 

3. பழங்குடியின குடும்பங்களுக்கு ஆண்டிற்கு ரூ.5000 வழங்கப்படும். 

4. விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ.3000 வழங்கப்படும்.

5. மீனவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.6000 வழங்கப்படும். 

6. பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 நிதியுதவி அளிக்கப்படும்.  

7. அனுகுள் சந்திரா கேண்டீன்களில் ரூ.5க்கு மூன்று வேளை உணவு வழங்கப்படும்.  

8. கல்லூரி சேரும் மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கப்படும். 

9.50000 இளைஞர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன் வழங்கப்படும்.

10. 2025ம் ஆண்டிற்குள் அனைத்து குடும்பங்களுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்.

11. இலவச மருத்துவ வசதிகளுக்கான நிதி 5 லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்த்தப்படும். 

என பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், இலவச உதவிகளையும் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. 

எதிர்க்கட்சிகள் விமர்சனம்

நாடு இலவசங்களால் கெட்டுவிட்டது, இலவசங்கள் வழங்குவதாலையே நாட்டின் வளர்ச்சி தடைபடுகிறது என பிரதமர் மோடி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேசியதை குறிப்பிட்டு, பாஜக இரட்டை வேடம் போடுவதாக அம்மாநில எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் பாஜகவை சேர்ந்த சிலரால் உச்சநீதிமன்றத்தில், தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் வழங்குவதாக எந்த கட்சியும் அறிவிக்கக்கூடாது எனவும், இலவசங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கூறி வழக்கு தொடரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதைப்போல குஜராத் தேர்தலுக்கும் பாஜக அவர்களின் தேர்தல் அறிக்கையில், இலவசங்களை வாரி இறைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.