இனி கொரோனா தனிமைப்படுத்துதல் இல்லை - சீனா அதிரடி 

China Airport

சீனாவிற்கு வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை ஜனவரி 8ம் தேதி முதல் தனிமைப்படுத்தும் முகாமிற்கு அனுப்பபோவதில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

21 நாட்கள் முகாம்

கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் கொரோனா கண்டறியப்பட்ட நாள் முதல் இப்போது வரை வெளிநாடுகளில் இருந்து சீனாவிற்குள் நுழைவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வரும் மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கொரொப்னா மரிசோதனைக்குப் பிறகு 21 நாட்கள் கொரோனா முகாம்களில் தனிமைப்படுத்தப்படுவர். இந்த முகாம்களில் இருக்கும்போது அவர்களால் மற்றவர்களோடு தொடர்புகொள்ள முடியாது. இதனால் வெளிநாடுகளில் இருந்து சீனாவிற்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. மேலும் வெளிநாடுகளில் இருந்து சீனாவிற்கு செல்லும் விமான போக்குவரத்தும் குறைந்தது. 

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு

இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளாலும், ஊரடங்கினாலும் சீன மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். ஏற்கெனவே கொரோனா வைரஸ் மக்களை வாட்டிவதைத்த நிலையில், சீன அரசு, ஊரடங்கு கொரோனா கட்டுப்பாடுகள் என தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மக்களை வாட்டிவதைத்துவருகின்றது. இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக ஆங்காங்கே தன்னெழுச்சி போராட்டங்கள் வெடித்தன. இதனால் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது சீன அரசு. 

மீண்டும் தாக்கிய கொரோனா

சீனாவில் ஊரடங்கு தளர்வு அமல்படுத்தப்பட்ட பிறகு, கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ஒரு நாளைக்கு லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் நோயாளிகள் நிரம்பி வழியும் காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. மேலும் கடந்த வாரத்தில் ஒரே நாளில் மட்டும் 2.50 கோடி சீனர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது உலக மக்களிடையே பெரும் பீதியை கிளப்பியது. உலக சுகாதார நிறுவனமும் சீனா குறித்த தனது அச்சத்தை வெளிப்படுத்தியிருந்தது. இதன் பின்னர் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை சீனாவின் சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. ஆனால் அங்கு தினமும் 10 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதாகவும், கொரோனாவால் பாதிக்கப்படும் வயதானவர்கள் உயிரிழந்துவருவதாகவும் ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இனி தனிமைப்படுத்துதல் இல்லை

இந்நிலையில் ஜனவரி 8ம் தேதி முதல் சீனாவிற்கு வரும் பயணிகள் கொரோனா முகாம்களில் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள் என சீன அரசு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே 21 நாட்களாக இருந்த தனிமைப்படுத்தும் முகாமை கடந்த நவம்பர் மாதம் முதல் 5 நாட்களாக குறைத்தது சீனா. இந்நிலையில் ஜனவரி 8ம் தேதி முதல் சீனாவிற்கு வருபவர்கள் கொரோனா முகாம்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளது. ஆனாலும் பி.சி.ஆர். எனப்படும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து சீனாவிற்கு படிக்க வரும் மாணவர்கள், சீனாவிற்கு பணி செய்ய வரும் ஊழியர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறுவர் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனிமைப்படுத்தும் முகாம் முற்றிலுமாக நீக்கப்படுவது மக்களிடையே வரவேற்பையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.