இந்தி திணிப்பு போராட்டம்: விவசாயி மறைவுக்கு முதல்வர் இரங்கல்..!

இந்தி திணிப்பு போராட்டம்: விவசாயி மறைவுக்கு முதல்வர் இரங்கல்..!

mk stalin

இந்தித் திணிப்புக்கு எதிராக உயிரிழந்துள்ள தாழையூர் தங்கவேலுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த பி.என். பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 18-வது வார்டு தாழையூர் பகுதியை சேர்ந்தவர் 85 வயதான விவசாயி தங்கவேல். இவர் நங்கவள்ளி தி.மு.க. முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பொறுப்பு வகித்துள்ளார். இவருக்கு ஜானகி என்ற மனைவியும் மணி, ரத்னவேல் என்ற 2 மகன்களும் உள்ளனர். இவர் தி.மு.க மீது கொண்ட பற்றின் காரணமாக கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலே பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்கு சென்றுள்ளார். மேலும் தி.மு.க ஆட்சியின் போது பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கையால் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார்

இந்நிலையில் இன்று காலை இவர் இந்தி திணிப்பை எதிர்த்து கோஷமிட்டபடி தாழையூர் தி.மு.க. அலுவலகத்துக்கு வந்தார். கேனில் பெட்ரோல் வாங்கி வந்து உடலில் ஊற்றி தீக்குளித்தார். உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் தீப்பற்ற வைக்கும் முன்பு ஒரு வெள்ளைத் தாளில் வாசகம் ஒன்று எழுதியுள்ளார். அதில் மத்திய அரசே அவசர இந்தி வேண்டாம் தாய்மொழி தமிழ் இருக்க இந்தி எதுக்கு என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. தொண்டர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தங்கவேல் உயிரிழப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், 

”இடியென வந்த செய்தியால் கலங்கித் தவிக்கிறேன். சேலம் மாவட்டம் நங்கவள்ளி பகுதி தாழையூரைச் சேர்ந்த கழக விவசாய அணி முன்னாள் ஒன்றியப் பொறுப்பாளர் தங்கவேல், இந்தித் திணிப்பிற்கு எதிராகத் தன்னுடலைத் தீக்கிரையாக்கிக் கொண்டார் என்றறிந்து வேதனையில் உழல்கிறேன்.
இந்தித் திணிப்புக்கு எதிராக உயிர்த்தியாகம் செய்துள்ள தாழையூர் தங்கவேலுவுக்கு வீரவணக்கம்! இந்தித் திணிப்பை எதிர்த்து அரசியல்ரீதியாக - ஜனநாயக வழியில் தொடர்ந்து போராடுவோம்! ஏற்கனவே ஏராளமான தீரர்களை இழந்துவிட்டோம். இனி ஒரு உயிரையும் நாம் இழக்கக் கூடாது! போராட்ட வடிவமாக இன்னுயிரை இழக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.
பன்முகத்தன்மைக் கொண்ட அழகிய நாட்டைக் குறுகிய மனப்பான்மையால் குலைத்திட வேண்டாம். 'இந்தியைத் திணிக்காதே' எனக் காலங்காலமாய் நாம் உரத்துச் சொல்லும் முழக்கம் ஆதிக்க மனப்பான்மையில் இந்தியைத் திணிக்கும் ஒன்றிய அரசின் செவிகளுக்கும் இதயத்துக்கும் எட்டும்வரை நாம் ஓயப்போவதில்லை. தாழையூர் தங்கவேலு அவர்களது குடும்பத்துக்கும் கழக உடன்பிறப்புகளுக்கும் இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.