அரசிதழில் வெளியான ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்

tn secretariat

ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்கள் பணத்தை பறித்துக்கொண்டு கடனாளி ஆக்குவதோடு, மனித உயிர்களை பறித்து வரும் நிலையில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு கடிவாளம் போடும் வகையில், தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு அக்டோபர் 19-ந் தேதி, 'ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழ்நாட்டில் தடை' விதிக்கும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா

பின்னர் இந்த மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த சூழ்நிலையில், சுமார் 4 மாதங்களுக்கு பின்னர் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த மாதம் 8-ந் தேதி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். அதற்கான காரணம் குறித்து கவர்னர் அளித்த விளக்கத்தில், "ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்டம் இயற்ற தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை" என்று குறிப்பிட்டிருந்தார். இது தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


அரசிதழில் வெளியீடு 

இதனை தொடர்ந்து கடந்த 23-ந் தேதி சட்டமன்ற கூட்டம் தொடங்கியதும், தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் பேரவையில் தாக்கல் செய்தார். 24-ந் தேதியன்று அதாவது மறுநாளே இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக தமிழக அரசு மீண்டும் அனுப்பிவைத்தது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக அரசு தீர்மானம் கொண்டு வந்தது. இது தமிழ்நாடு அரசியலில் பேசுபொருளான நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று மாலை ஒப்புதல் அளித்தார். இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இன்று அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

தண்டை விவரம்

  • இந்த தடை சட்டம் நடைமுறைக்கு வருவதால் விதிக்கப்படும் தண்டனைகள் விவரம் வருமாறு:- 
  • ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள், பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும். 
  • இந்த விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்தால் ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது 2-ம் சேர்த்து விதிக்கப்படும். 
  • ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளிப்போருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். 
  • இந்த விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்து தண்டனை விதிக்கப்பட்டு மீண்டும் தவறு செய்தால், ஒரு ஆண்டுக்கு மேல் 3 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். 
  • ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளித்தவர் ஒரு முறை தண்டிக்கப்பட்டு மீண்டும் தவறிழைத்தால், அந்த தண்டனை 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையாகவும், அபராதம் ரூ.20 லட்சமாகவும் நீட்டிக்கப்படும்.