500 அரசு பேருந்துகளை தனியார்க்கு வழங்க போவதாக அறிவிப்பு.. டிடிவி, அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு.!

title

கிராஸ் காஸ்ட்  காண்ட்ராக்ட் முறையில் இந்த ஆண்டு 500 பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி வழங்கப் போவதாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் இந்த முடிவுக்கு போக்குவரத்து சங்கங்கள் தங்களது கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறது.

500 பேருந்து வழித்தடங்களை தனியார்மயமாக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியிருந்தநிலையில், அத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி பல்வேறு இடங்களில் இந்திய தொழிற் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இத்திட்டத்தைக் கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும், பாட்டாளி மக்கள் கட்சியும் வலியுறுத்தியுள்ளனர்.

தனியார்மயபடுத்துவது ஏற்கதக்கதல்ல

இதுதொடர்பாக, டிடிவி தினகரன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது; பொதுமக்களுக்கு சேவை வழங்கும் அரசு பேருந்துகளை தனியார் மயமாக்க தி.மு.க. அரசு திட்டமிடுவதாக  ஆளுங்கட்சி தொழிற்சங்கமே குற்றம்சாட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னையில் தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்குவதற்கான ஏற்பாடுகளை செய்துவருவதாக போக்குவரத்துத்துறை அமைச்சரே கூறியிருப்பதன் மூலம் பேருந்து போக்குவரத்து, தனியார் மயமாக்கப்படும் என்பது உறுதியாக தெரியவருகிறது.

மக்களுக்கு குறைந்த செலவில் பொதுப்போக்குவரத்தை வழங்கும் கடமையில் இருந்து அரசு விலகி, தனியார் மயமாக்க முடிவு செய்வது ஏற்கதக்கதல்ல. பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் இருதரப்பையும் பாதிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்.

போக்குவரத்துறையில் புரையோடியிருக்கும் முறைகேடுகளை களையெடுத்து லாபநோக்கில்  போக்குவரத்துறையை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

தனியார்மயம் குறித்து தமிழ்நாடு அரசு சிந்திக்கவே கூடாது

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் அடுத்த ஆண்டிற்குள் 1000 தனியார் பேருந்துகளை, மாநகர போக்குவரத்துக் கழகத்தின்  பெயரில் இயக்கும் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதை திட்டவட்டமாக மறுக்காத போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர், மழுப்பலான விளக்கத்தை அளித்திருக்கிறார். தனியார் பேருந்துகளை எந்த வடிவத்திலும் இயக்க முனைவது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்குவதில் தான் முடியும் என்பதால், அது குறித்து தமிழ்நாடு அரசு சிந்திக்கவே கூடாது.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் 1000 தனியார் பேருந்துகளை இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டிருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் ஊடகங்களில் வெளியாகிருந்த செய்தி பொதுமக்கள் மத்தியிலும், போக்குவரத்துத் தொழிலாளர்கள் மத்தியிலும் கடுமையான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலவச, மானியக் கட்டண சலுகைகள் தொடரும் என்றாலும் கூட, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவையும் திரும்பப் பெறப்படக் கூடும். இத்தகைய ஆபத்து இருப்பதால் தான் இந்தத் திட்டத்தை பா.ம.க. கடுமையாக எதிர்க்கிறது.

மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான போக்குவரத்தை அரசே நடத்த வேண்டும் என்பதற்காகவே தனியார் பேருந்துகள் கலைஞர் காலத்தில் அரசுடைமையாக்கப்பட்டது. ஆனால், இப்போது அதற்கு முற்றிலும் எதிரான வகையில் அரசு போக்குவரத்துக் கழகங்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது என்று தனது அறிக்கையில் அறிவுறுத்தியிருக்கிறார்.