நகை கடை உரிமையாளர் தற்கொலை - போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்..

Jewelery shop owners protest at trichy

நகைக்கடையில் சோதனை

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் பி.ராஜசேகரன்(58). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நகரச் செயலாளர். இவர் பட்டுக்கோட்டையில் கடந்த 25 ஆண்டுகளாக நகைக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில், இவர் திருட்டு நகையை வாங்கியதாக கூறி, ஜூன் 22-ம் தேதி திருச்சி கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீஸார், இவரது நகைக்கடையில் சோதனை நடத்தினர். பின்னர், ராஜசேகரன், அவருடைய மனைவி லட்சுமி ஆகியோரை விசாரணைக்கு திருச்சிக்கு அழைத்துச் சென்றனர்.

நகைக்கடை உரிமையாளர் தற்கொலை

அதன்பிறகு, வியாபாரிகள் உள்ளிட்டோரின் முயற்சியால் ராஜசேகரன், அவரது மனைவி ஆகியோர் வீட்டுக்கு திரும்பினர். இந்நிலையில், வெளியில் சென்று வருவதாக கூறிச் சென்ற ராஜசேகரன், செட்டியக்காடு என்ற பகுதியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருவாரூர் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

போலீசார் சித்தரவதை..?

இந்நிலையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ராஜசேகரன், அவரது மனைவி லட்சுமி ஆகியோரை போலீஸார் சித்ரவதை செய்ததாகவும், இதனால் ராஜசேகரன் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறி, தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கம் கைவினைஞர்கள் தொழிற்சங்க பேரவை சங்கம் மற்றும் அனைத்து விஸ்வகர்ம சமூக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சி ராமகிருஷ்ண பாலம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் போலீஸாரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தும் தற்கொலைக்கு காரணமான திருச்சி கே.கே நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உட்பட 8 காவல்துறையினர்கள் மீது வழக்கு பதிவுவும், அவர்களை பணியிடை நீக்கம் செய்யவும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.  இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொகொண்டனர்.