பேனா நினைவுச் சின்னம்.!

ஆதரவும்..எதிர்ப்பும்.. அறிக்கை வெளியிட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

Pen-Startue-Resz

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை பெருமைப்படுத்தும் வகையில் மெரினா கடலில் பேனா வடிவ நினைவு சின்னத்தை ரூ.81 கோடியில் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக கடந்த மாதம் ஜன-31-ந் தேதி சென்னையில் கருத்து கேட்பு கூட்டமும் நடத்தப்பட்டது. இதனை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்தியது. இதில் மாவட்ட கலெக்டர் சு.அமிர்தஜோதி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சுற்றுச்சூழல் சார்ந்த அமைப்பு நிர்வாகிகள், மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்தனர்.

அந்த கூட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட திமுக.எம்.எல்.ஏக்கள், மாதவரம் சுதர்சனம், ஐட்ரீம் மூர்த்தி, எபனேசர், தமிழ்நாடு பா.ஜ.க. மீனவர் அணித் தலைவர் முனுசாமி மற்றும் செம்மலர் சேகர், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சங்கர், திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்கத் தலைவர் வி.பி.மணி, அனைத்து மீனவர்கள் சங்கத் தலைவர் நாஞ்சில் ரவி, சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் நிர்வாகிகள் அருள் முருகானந்தம், இளங்கோ, சமூக செயற்பாட்டாளர் முகிலன் உள்ளிட்ட ஏராளமானோர் தங்கள் பதிவுகளை பதிவு செய்திருந்தனர். 

அன்று நடைபெற்ற கருத்துக் கேட்புக்கூட்டத்தில் சீமான் எதிர்ப்பு தெரிவித்திருந்தநிலையில், பேனா சின்னம் அமைப்பதற்க்கான அறிக்கையை தற்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் எத்தனை பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர், எத்தனை பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்ற விவரத்தை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தயார் செய்துள்ளது. அதன்படி, 34 பேரின் கருத்துகள் அதில் இடம் பெற்றிருந்த நிலையில்,  22 பேர் ஆதரவு கருத்தும், 12 பேரின் எதிர்ப்பு கருக்களும் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த அறிக்கையில் பேனா நினைவுச் சின்னம் அமைத்தால் உடைப்பேன் என்று சீமான் பேசியது அப்படியே பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கருத்து கேட்பு கூட்ட அறிக்கையை தமிழக பொதுப்பணித்துறை, மத்திய அரசிடம் விரைவில் சமர்பிக்க உள்ளதாக தெரிகிறது. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்த பிறகு பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான பணிகள் தொடங்க இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.