FIFA கால்பந்தாட்டத்தை காண, துணிச்சலான வழியை தேர்ந்தெடுத்த கேரள பெண்! 

Kerala Woman

பிஃபா கால்பந்து போட்டியை காண 33 வயதான கேரள பெண் ஒருவர் துணிச்சலான முறையில் பயணம் மேற்கொண்ட நிகழ்வு சமூக வலைதளத்தில் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. 

பிஃபா கால்பந்து

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கால்பந்தாட்ட உலககோப்பை தொடர், இந்த ஆண்டு கத்தாரில் நடைபெற்று வருகிறது. உலகளவில் மிகவும் பிரபலமான விளையாட்டுப் போட்டிகளில் கால்பந்தாட்ட போட்டி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்பந்தாட்ட உலக கோப்பை தொடருக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் இருந்தாலும், இந்தியாவைப் பொறுத்தவரை, கிரிக்கெட்டிற்கு இருக்கும் அளவிற்கு கால்பந்தாட்டத்திற்கு ரசிகர்கள் கிடையாது. ஆனால் கேரளா, பல செயல்களில் விதிவிலக்காக இருப்பதுபோல கால்பந்தாட்டத்திலும் விதிவிலக்கு என்றே கூறலாம். ஏனென்றால் கேரளாவில் கால்பந்தாட்டத்திற்கு ரசிகர்கள் அதிகம். அதுமட்டுமில்லாமல் அவர்கள் இந்த பிஃபா உலக கோப்பையை ஒரு திருவிழாவைப் போல கொண்டாடுகிறார்கள். 

கேரள ரசிகை

பிஃபா உலக கோப்பையை காண உலக முழுவதும் இருந்து லட்சக்கணக்கான ரசிகர்கள் கத்தார் நாட்டிற்கு படையெடுத்து வருகின்றனர். அவர்கள் எல்லாரும் பெரும்பாலும் விமானம் மூலமே பயணம் செய்து கத்தாருக்கு செல்கின்றனர். ஆனால் கேரளாவைச் சேர்ந்த கால்பந்தாட்ட ரசிகை ஒருவர் காரில் பயணம் செய்து கத்தார் உலக கோப்பை போட்டியை காண சென்றுள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. நீங்கள் நம்பவில்லை என்றாலும் அதுதான் உண்மை. 

கேரளாவைச் சேர்ந்த நஜ்ரா நௌசத் என்ற 33 வயது குடும்பத் தலைவி ஒருவர் பிஃபா-2022 உலக கோப்பையை காண ஆவலாக இருந்துள்ளார். ஆனால் அதற்கு அவர் மற்றவர்களைப்போல விமானத்தில் செல்லாமல் தனது மஹேந்திரா தார் (Mahindra Thar) வாகனத்தில் கேரளாவிலிருந்து கத்தாருக்கு சென்றுள்ளார். அதுமட்டும் இல்லாமல் அவர் தனது 5 குழந்தைகளை இந்த பயணத்தில் தன்னோடு அழைத்துச் சென்றுள்ளார் என்பதே கூடுதல் சிறப்பு. 

மும்பை to கத்தார் 

நஜ்ரா நௌசத் கேரளாவின் கன்னூரிலிருந்து கோயம்புத்தூர் வழியாக மும்பை சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து கப்பல் மூலமாக ஓமனுக்கு சென்ற அவர், ஓமனிலிருந்து தனது மஹேந்திரா தார் வாகனத்தில் கத்தாருக்கு சென்றுள்ளார். கேரளாவிலிருந்து கத்தாருக்கு சென்ற தனது சாகச பயணங்களை அவ்வப்போது வீடியோ மற்றும் புகைப்படமாக எடுத்து அதனை அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். நஜ்ராவின் இன்ஸ்டா பக்கத்தை 93,000க்கும் அதிகமானோர் பின்பற்றுகின்றனர். 

கடந்த அக்டோபர் 15ம் தேதி கேரளாவில் தனது பயணத்தை தொடங்கிய நஜ்ரா இன்றுடன் தனது 54வது நாள் பயணத்தை தொடர்ந்து வருகிறார். மேலும் கால்பந்து பற்றி கூறும்போது, அர்ஜெண்டினாவே தனக்கு மிகவும் பிடித்த அணி என்றும், தான் ஒரு மெஸ்ஸியின் தீவிர ரசிகை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அர்ஜெண்டினா அணியின் ஜெர்ஸியிலேயே பலப் புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

நஜ்ரா நௌசத்தின் இந்த சாகசப் பயணத்தை அவரை பின் தொடர்பபவர்கள் சமூக வலைதளத்தில் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.