மாற்றுத்திறனாளிக்களுக்கான பாதையை நொறுக்கிய மாண்டஸ்..! 

marina Paathai

வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தில் இருந்து 180 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மாண்டஸ் புயலின் மாற்றங்கள்

மாண்டஸ் புயலானது கடந்த6ம் தேதி வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவானது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வுப்பகுதி 7ம் தேதி புயலாக மாறியது. பின்னர் மேலும் வலுப்பெற்ற புயல் தீவிர புயலாக நேற்று மாறியது. இந்த புயலுக்கு ஐக்கிய அரபு நாடுகள் அளித்த மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது. ஆனால் நேற்று நள்ளிரவில் தீவிர புயலாக இருந்த மாண்டஸ், மீண்டும் புயலாக வலுவிழந்தது. 

இன்று கடலை கடக்கும்

சென்னை மற்றும் புதுச்சேரிக்கு இடையே மாண்டஸ் புயல் கடலை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின் படி சென்னை மற்றும் புதுச்சேரி பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதலே தீவிரமான மழை பெய்துவருகிறது. 

ரெட் அலர்ட்

மாண்டஸ் புயல் சென்னைக்கு அருகில் கடலை கடப்பதால் சென்னை மற்றும் புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் அரசு இயந்திரங்கள் அனைத்தும் மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர். 

பள்ளிகளுக்கு விடுமுறை 

மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மட்டும் இல்லாது உள்மாவட்டங்களிலும் கன மழை முதல் மிக கன மழை வரை பெய்யகூடும், காற்று வேகமாக வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகை, திருச்சி, இராமநாதபுரம் என மொத்தம் 25 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

180 கி.மீ. தொலைவில் மாண்டஸ்

பிற்பகல் 3 மணி நிலவரப்படி மாண்டஸ் புயலானது மாமல்லபுரத்தில் இருந்து சுமார் 180 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை மாண்டஸ் புயலானது மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது அதிகபட்சமாக மணிக்கு80 முதல் 85 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயலின் காரணமாக இன்று மாலை முதல் சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

மெரினாவில் உடைந்த சிறப்பு பாதை 

சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளும், கடற்கரைக்குச் சென்று கடலை கண்டு ரசிக்கும் வகையில் சிறப்பு பாதையை ஏற்பாடு செய்தது சென்னை மாநகராட்சி. இதன்படி 380 மீ நீளம் மற்றும் 3 மீட்டர் அகலம், காந்தி சிலை அருகே 125 மீ நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் இந்த பாதை அமைக்கப்பட்டது. கான்கிரீட் அல்லாத மரப்பலகையால் ரூ.1 கோடி செலவில் இந்த சிறப்பு பாதை அமைக்கப்பட்டு கடந்த நவம்பர் மாத இறுதியில் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கப்பட்டது. 

இந்நிலையில், மாண்டஸ் புயலின் சீற்றத்தின் காரணமாக மரப்பலகைகள் உடைந்துள்ளன. ஒரு கோடி ரூபாய் செலவில், அமைக்கப்பட்டு, இரண்டு வாரங்களுக்குள் மரப்பாதை உடைந்துள்ளது பல விமர்சனங்களை எழுப்பியுள்ளது. 

சென்னை மாநகர ஆணையரின் கருத்து

இது குறித்து கருத்து தெரிவித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளின்படி கடற்கரையில் குழி தோண்டி, காங்கிரீட்டால் அடித்தளம் போட முடியாது என தெரிவித்தார். இதனால் தான் மணலின் மீது மரப்பலகைகளால் பாதை அமைக்கப்பட்டது என தெரிவித்துள்ளார். மேலும், கடல் சீற்றத்தால் தமிழ்நாடு முழுவதும் கடற்கரை பகுதியில் சிறிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், மெரினாவில் மாற்றுத்திறனாளிக்கு என்று அமைக்கப்பட்ட சிறப்பு பாதையின் முடிவு பகுதியில் மணல் அரிப்பு ஏற்பட்டுள்ளதாலேயே பாதை தகர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் மரப்பாதை உடையவில்லை மணல் அரிப்பால் தகர்ந்துள்ளது, அதனை உடனடியாக சரிசெய்துவிட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.