பேச்சு வார்த்தை நடத்திய  அமைச்சர்கள் - போராட்டத்தை வாபஸ் பெற்ற ஜாக்டோ ஜியோ

jacto jiyo

கோட்டையை முற்றுகையிடும் போராட்டம்

கடந்த 2-ந் தேதி ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. தங்களின் பல்வேறு கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் விதமாக ஏப்ரல் 11-ந் தேதி கோட்டையை நோக்கி முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது என ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பேச்சு வார்த்தை நடத்திய அமைச்சர்கள்

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட இருந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினரை அழைத்து தமிழ்நாடு அரசின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சு வார்த்தையில் தமிழ்நாடு அரசின் சார்பில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வா.வேலு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பேச்சு வார்த்தையில், அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்ததோடு, போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசின் சார்பில் வலியுறுத்தியதாகவும், அவர்களின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர்கள் குழு தெரிவித்தனர். அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தையை அடுத்து வரும் 11 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.