NLC விவகாரம்.. பிரமாண மனு தாக்கல் செய்ய வேண்டும்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

nlc che gov

நெற்பயிர்கள் அழிப்பு

கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் வளையமாதேவி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் பயிரிடப்பட்ட நெல் வயல்களில் இராட்சத வாகனங்கள் மூலம் நெற்பயிர்களை அழித்தது என்.எல்.சி. நிர்வாகம். என்.எல்.சி.விரிவாக்க பணிக்காக விளைநிலங்களை கையகப்படுத்துகிறோம் என்ற பெயரில் விளைநிலங்களை நாசம் செய்தது  என்.எல்.சி. நிர்வாகம்.  என்.எல்.சி. நிர்வாகத்தின் செயல்பாடுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டனக்குரல்கள் எழுந்தன.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இந்தநிலையில், என்.எல்.சி.கையகப்படுத்திய நிலத்தில் அறுவடை முடியும் வரை விவசாயிகளுக்கு எந்த தொந்தரவும் கொடுக்க கூடாது என பாதிக்கப்பட்ட நிலத்தின் உரிமையாளர் முருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நிலம் கையகப்படுத்தல் சட்டப்பிரிவு 101-ன் படி நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும், வழக்கை அவரசர வழக்காக எடுத்து கொள்ளவேண்டும் என்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு முறையீடு செய்தார். பின்னர், பிற்பகல் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தெரிவித்திருந்தார்.

மனுதாரர் தரப்பு வாதம்

அதேபோல், பிற்பகல் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பிலும், தமிழக அரசு என்.எல்.சி. தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. முதலில் மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. 2011ம் ஆண்டு நிலத்தை கையகப்படுத்தி இதுவரை எந்த பணியும் செய்யாமல், தற்போது விவசாயம் நடைபெற்று அறுவடைக்கு காத்திருக்கக்கூடிய நிலையில் கால்வாய் தோண்டுகிறார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டது. மேலும், நிலத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.  

நீதிபதி கேள்வி 

இதையடுத்து, நிலத்தை கையகப்படுத்திய பின் சாகுபடி செய்ய அனுமதித்தது ஏன்? எனவும், நிலத்துக்கு வேலி அமைக்காதது ஏன்? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது, 1.5 கிலோ மீட்டர் தூரத்தில் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க தயார் என்று என்.எல்.சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், கால்வாய் தோண்டாவிட்டால் சுரங்கத்துக்குள் வெள்ளம் புகுந்துவிடும் என்றும் என்.எல்.சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

பிரமாண மனு தாக்கல் செய்ய வேண்டும்

அடுத்ததாக, நிலத்தை பயன்பாட்டுக்கு எடுக்காவிட்டால் மின்சார உற்பத்தி பாதிக்கப்படும் என்றும், செப்டம்பர் 15-ம் தேதிக்குள் பயிரை அறுவடை செய்து நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, என்.எல்.சி.க்காக கையகப்ப்டுத்திய நிலத்தில் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு, இழப்பீடு வழங்குவது குறித்து பிரமாண மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு என்.எல்.சி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல், அறுவடைக்குப் பின் நிலத்தை ஒப்படைப்பது தொடர்பாக மனுதாரரும் உத்தரவாதம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். 

ஒத்திவைப்பு

இறுதியாக, என்.எல்.சி கையகப்படுத்திய நிலத்தில் அறுவடை முடியும் வரை விவசாயிகளுக்கு எந்த தொந்தரவும் கொடுக்க கூடாது எனக் கோரிய வழக்கின் விசாரணையை நாளை மறுநாள் தள்ளிவைத்து, தமிழக அரசு என்.எல்.சி பிரமாண மனு அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.