மணிப்பூர் விவகாரத்தால் முடங்கிய நாடாளுமன்றம்.. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீர்மானமா.? 

pmo

மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.    

பிரதமர் கண்மூடி அமர்ந்திருப்பது ஏன்?

மணிப்பூர் மாநிலம் கடந்த மூன்று மாதங்களாக பற்றி எரிந்தநிலையில், கடந்த 20-ம் தேதி வெளியான ஒரு வீடியோவால் இந்தியா முழுவதும் அந்த விவகாரம் பற்றி எரியத் தொடங்கியது. இந்த விவகாரத்தில் பிரதமரின் மவுனமும் செயலற்ற தன்மையுமே மணிப்பூர் அராஜகத்திற்கு காரணம் எனவும் வன்முறைகளை கண்டுகொள்ளாமல் பிரதமர் கண்மூடி அமர்ந்திருப்பது ஏன்? எனவும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தனர்.  

4-வது நாளாக நாடாளுமன்றம் முடக்கம்

இந்தநிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு முதலே, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபடப்போவதாக எதிர்க்கட்சிகள் முடிவு செய்தனர். அதேபோல், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆரம்பித்த முதல் நாள் முதல் 4-வது நாளான இன்று வரை நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.   

பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் ஆலோசனை

மணிப்பூர் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளித்தே ஆக வேண்டும் என எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு வந்தநிலையில், 4-வது நாளான இன்றும் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியே பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீர்மானமா.?

இதையடுத்து, அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் ஆலோசிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. மக்களவையில் பாஜகவிற்கு அறுதிபெரும்பான்மை இருக்கிறது. ஆனால், தீர்மானம் கொண்டு வந்தாலும் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற இயலாது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட சூழலில், எதிர்க்கட்சிகள் இந்தமாதிரியான முடிவை எடுத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது.