பதவியில் இருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்.. சரத் பவாருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்தல்.!

sharad

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை சரத் பவார் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

யார் இந்த சரத் பவார்

கடந்த 1960 ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கியதாக குறிப்பிட்டுள்ள சரத் பவார் அதே மே மாதத்தில், தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்த சம்பவம் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சரத் பவார் காங்கிரஸ் கட்சியின் மீது கொண்ட ஈர்ப்பினால் இளைஞர் காங்கிரசில் இனைந்து, படிப்படியாக முன்னேறி, மகாராஷ்டிரா முதலமைச்சர், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர், வேளாண் துறை அமைச்சர் என பல உயர் பதவிகளை வகித்துள்ளார். 1999-ம் ஆண்டு சோனியா காந்தி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கிய சரத் பவார், 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் வேளாண்துறை அமைச்சராக பதவி வகித்தார். மேலும் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் சரவதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் சரத் பவார் பதவி வகித்துள்ளார். 

தனது 63 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் தேசிய அளவிலும், மாகாராஷ்டிர மாநில அளவிலும் பல்வேறு அரசியல் முடிவுகளை எடுப்பதற்கு சரத் பவார் துணை நின்றுள்ளார். இந்நிலையில் வயது முதிர்வாலும், உடல்நலக்குறைவாலும் தனது 83 வயதில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் அவர் தற்போது வகிக்கும் ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்காலம் முடிவடைய இன்னும் 3 ஆண்டுகள் உள்ளது. எனவே இந்த பதவிக்காலம் முடிவடைந்த பின் தேர்தல் அரசியலில் ஈடுபடபோவதில்லை என தெரிவித்துள்ளார். 

1991-ம் ஆண்டு நரசிம்ம ராவ் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டபோதே, சரத் பவாருக்கு பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அதை விட்டுக்கொடுத்து, பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவியேற்றார். மேலும் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது பிரதமராகும் எண்ணம் இருப்பதாலேயே இவர் காங்கிரசுடன் கூட்டணி வைக்க மறுக்கிறார் என்ற கருத்துக்கள் நிலவியது. மேலும் 2024-ம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் சரத் பவார் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என பல யூகங்கள் நிலவி வந்தன. இதனால் காங்கிரசுடன் கூட்டணி வைக்காமல் மூன்று அணிகளாக தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருதினர். இந்நிலையில், அனைத்து யூகங்களையும் தவறாக்கி, தேர்தல் அரசியலில் இருந்தும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்தும் ஓய்வு பெறுவதாக சரத் பவார் அறிவித்திருப்பது, மகாராஷ்டிர மாநில அரசியலில் மட்டும் இல்லாமல், தேசிய அரசியலிலும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 

கட்சி தொண்டர்கள் உறுப்பினர்கள் வலியுறுத்தல்

தனது வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியீட்டு நிகழ்ச்சியில், தனது ராஜினாமாவை சரத் பவார் அறிவித்ததால், தொண்டர்கள் அரங்கத்திலேயே எழுந்து, ராஜினாமா அறிவிப்பை திரும்பப்பெற வலியுறுத்தினர். மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரத் பவார் தனது அறிவிப்பை திரும்பபெறாவிட்டால் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிடுவதாக கூறினர். ஆனால் சரத் பவாரோ, தான் பதவியில் இருந்து மட்டுமே ஓய்வு பெறுவதாகவும், அரசியலில் இருந்தோ, கட்சிப்பணியில் இருந்தோ ஓய்வு பெறவில்லை எனவும் தெரிவித்தார்.  

தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்தல்

இந்தநிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் சரத் பவார் தங்களின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மதச்சார்பற்ற கூட்டணியை வலுப்படுத்துவதில் முக்கியமான தலைவர் சரத்பவார். 2024 பொதுத்தேர்தலை கருத்தில் கொண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை சரத் பவார் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.