ரம்மி விளையாட அறிவு வேண்டும் - நடிகர் சரத்குமார்.

sarathkumar

 

பூரண மதுவிலக்கு வேண்டி போராட்டம்

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் சரத்குமார். கதாநாயகனாக நடித்த இவர் தற்போது குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் பழுவேட்டரையராக நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் சமத்துவ மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். இந்நிலையில் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு வேண்டி தனது கட்சியின் சார்பில் சென்னை ,எழும்பூரில் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் நடிகர் சரத்குமார்  ஈடுபட்டுள்ளார். 

ரம்மி அறிவுப்பூர்வமான விளையாட்டு

அப்போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, ஆன்லைன் ரம்மி குறித்து கேள்வி எழுப்பியுள்ளர். அதற்கு பதிலளித்த சரத்குமார். ரம்மி விளையாடுவது அறிவுப்பூர்வமான விளையாட்டு என்றும் ரம்மி விளையாட அறிவு வேண்டும் என்றும் கூறினார். மேலும், ரம்மி மட்டுமல்ல கிரிக்கெட் கூட சூதாட்டம் தான் என்றும் விளையாட்டை வைத்து அனைவரும் சூதாடுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார். 

ஓட்டு போடவும் சொல்கிறேன், மக்கள் கேட்பார்களா?

மேலும் பேசிய அவர், நான் சொன்னால் மட்டும் மக்கள் விடுவார்களா ? . ஓட்டு போடுங்கள் என்றும் சொல்கிறேன் ஆனால் மக்கள் கேட்கிறார்களா ?. குடும்பத் தகராறில் தற்கொலை செய்து கொண்டவர்களை ஆன்லைன் ரம்மிக்காக தற்கொலை என்கின்றனர். ஆன்லைன் ரம்மிக்கு தடை சட்டம் வருவதற்கு முன்பே நான் விளம்பரத்தில் நடித்துவிட்டேன். ஆன்லைன் ரம்மியை தடுக்க சட்டம் இயற்றுவது அரசின் பணி என்று  கூறினார். சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரின் இந்த பேட்டி ஒரு வித சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.