மாதவிடாய் விடுப்பு வழங்கக் கோரிய மனு தள்ளுபடி..! 

Menstrual Pain

பள்ளிகளிலும், பணியிடங்களிலும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுப்பு அளிக்க வேண்டும் எனக் கோரிய பொது நல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

மாதவிடாய் கால விடுப்பு 

வயதுக்கு வந்த பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் ஏற்படுவது இயற்கை. இது இயற்கையான நிகழ்வாக இருந்தாலும் பெரும்பாலான பெண்களுக்கு இது மிகவும் வலி நிறைந்த நாட்களாகவே இருந்துவருகிறது. இந்தியா போன்ற நாட்டில் மாதவிடாய் குறித்த போதுமான புரிதல் பெரும்பாலானவர்களிடம் இல்லை. இந்நிலையில் உலகளவில் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என பல்வேறு பெண்கள் நல அமைப்புகள் கோரிக்கைகள் வைத்துவருகின்றனர். சமீபத்தில் ஸ்பெயினில், ஒவ்வொரு மாதமும் 3 முதல் 5 நாட்கள் பெண்கள் மாதவிடாய் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என அந்நாட்டு அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு ஒரு மாபெரும் மாற்றத்திற்கு தொடக்கமாக பார்க்கப்படுகிறது. 

உச்சநீதிமன்றத்தில் மனு

இந்நிலையில் இந்தியாவில், மாதவிடாய் காலத்தில் பள்ளி, கல்லூரி செல்லும் வயது வந்த மாணவிகள் மற்றும் பணி செய்யும் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டும் எனக் கோரி பொது நல மனு ஒன்றை, வழக்கறிஞர் சைலேந்திர மணி திரிப்பாதி என்பவர் தாக்கல் செய்தார். இந்த மனுவானது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா மற்றும் நீதிபதி ஜே.பி.பரித்வாலா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

இந்த வழக்கில் எதிர்மனுதாரராக ஆஜரான நபர், மாதவிடாய் கால விடுப்பு வழங்க கோரினால், பெண்களை எந்த நிறுவனமும் பணிக்கு அமர்த்தமாட்டார்கள் என வாதாடினார். இதனைக்கேட்ட தலைமைநீதிபதி சந்திர சூட், ஆமாம், மாதவிடாய் விடுப்பை கட்டாயப்படுத்தினால் முதலாளிகளும், நிறுவன உரிமையாளர்களும் பெண்களை பணிக்கு அமர்த்தமாட்டார்கள் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார். 

மேலும் நீதிபதிகள் மனுதாரரிடம், இந்த விவகாரம் அரசின் கொள்கை முடிவை சார்ந்தது என்பதால், மனுவை ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்திடம் கோரிக்கையாக அளிக்கும்படி பரிந்துரைத்தனர். 

எந்தெந்த நாடுகளில் விடுமுறை

இங்கிலாந்து, வேல்ஸ், சீனா, ஜப்பான், தைவான், இந்தோனேஷியா, தென் கொரியா, ஸ்பெயின் மற்றும் ஷாம்பியா ஆகிய நாடுகளில் ஏதேனும் ஒரு வகையில் மாதவிடாய் விடுப்பு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.