செந்தில் பாலாஜி வழக்கு.. வாதங்கள் நிறைவு.. இன்றே தீர்ப்பு.?

fgcbvn

செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நிறைவடைந்தநிலையில், அந்த வழக்கின் மீதான தீர்ப்பு இன்று வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி கடந்த ஜூன் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து நீதிமன்றக் காவலில் இருந்து வந்தார். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், உயர் சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது மருத்துவக்குழு கண்காணிப்பில் இருந்து வருகிறார். 

காணொளி காட்சி மூலம் ஆஜர்

செந்தில் பாலாஜிக்கு ஜூன் 21-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.  ஜூன் 28 ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு காவல் நிறைவு பெற்றநிலையில், அவர் காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரிடம் நலம் விசாரித்தார் நீதிபதி அல்லி. அப்போது செந்தில் பாலாஜி எப்படி இருக்கிறீர்கள் என நீதிபதி அல்லி கேட்க, வலியுடன் இருக்கிறேன் என செந்தில் பாலாஜி பதிலளித்திருந்தார். பின்னர்,  அவரது காவலை ஜூலை 12 ஆம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டார்.   

3-வது நீதிபதி தலைமையில் விசாரணை

இந்தநிலையில், செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின் முடிவில் செந்தில் பாலாஜியை விடுவிக்க வேண்டும் என்று ஒரு நீதிபதியும், நீதிமன்ற காவல் சட்டவிரோதமில்லை என  மற்றொரு நீதிபதியும் மாறுபட்ட தீர்ப்பை கடந்த 06-ம் தேதி வழங்கியநிலையில்,  3-வது நீதிபதியாக நீதிபதி  கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். 3-வது நீதிபதி தலைமையில் ஏற்கனவே விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையில் அமலாக்கத்துறை தரப்பிலிருந்து வழக்கறிஞர் துஷார் மேத்தாவும், செந்தில் பாலாஜி மனைவி தரப்பிலிருந்து வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டனர். 

கபில் சிபல் வாதம்

இந்தநிலையில்,  செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று ஜூலை 14  காலை முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது. விசாரணையில்  இருதரப்பிலிருந்தும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டப்படி,  அமலாக்கத்துறையினர் காவல்துறை அதிகாரிகள் இல்லை என மேகலா தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதத்தை முன்வைத்தார். அனைத்து ஆதாரத்தையும் சேகரித்த பின்பே ஆதாரத்தின் அடிப்படையில் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்ய முடியும். 

சோதனை நடத்த, பறிமுதல் செய்ய, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்ப அதிகாரம் உள்ளது. அமலாக்கத்துறையின் அதிகாரம் தொடர்பாக வழக்கறிஞர் துஷார் மேத்தா முரணான வாதம் செய்துள்ளார். அமலாக்கத்துறைக்கு காவல்துறையினரின் அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் துஷார் மேத்தா வாதிட்டுள்ளார். ஆனால் உயர்நீதிமன்றத்தில் அதற்கு மாறாக அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷார் மேத்தா தற்போது வாதிடுகிறார் என்று கபில் சிபல் தெரிவித்திருந்தார்.

துஷார் மேத்தா வாதம்

அதன்பிறகு, வாதிட்ட அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் "செந்தில் பாலாஜியை ஆவணங்களின் அடிப்படையில்தான் கைது செய்தோம். கைதில் எங்களுக்கு உரிமை உள்ளது. அதேபோல் அவரிடம் கூடுதல் ஆதாரங்களை வாங்க எங்களுக்கு சட்டப்படி உரிமை உண்டு. அவரை நாங்கள் விசாரிக்க முடியாது என்றால் அது எங்கள் விசாரணை ஆணையத்தின் அடிப்படையையே கேள்விக்கு உள்ளாக்குகிறது. ஒருவர் தவறு செய்ததாக தோன்றினால் என்னால் அவரை விசாரிக்க முடியும்" என்று அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதத்தை முன்வைத்திருந்தார். 

இன்றே தீர்ப்பு.?

இறுதியாக, செந்தில் பாலாஜி மேகலா தொடர்ந்த வழக்கின் மீதான வாதங்கள் நிறைவடைந்துள்ளது. இந்தநிலையில், செந்தில் பாலாஜி வழக்கில் 3-வது நீதிபதி கார்த்திகேயன் இன்று தீர்ப்பு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.