“மோதானி” களை அம்பலப்படுத்துவோம்: சு.வெ. ட்வீட்!

Su Venkatesan

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட நிகழ்வுகள் இன்றுடன் நிறைவு பெறவுள்ள நிலையில், விவாதிக்க அஞ்சிய “மோதானி” களை மக்களிடம் அம்பலப்படுத்துவோம் என சு.வெங்கடேசன் எம்.பி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

நாடாளுமன்ற கூட்டத்தொடர்

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்ட கூட்டத்தொடர் மார்ச் 13ல் தொடங்கி ஏப்.6 வரை நடக்கிறது. அதானி மற்றும் ராகுல் விவகாரத்தில் ஆளும், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து முடங்கி கிடக்கிறது. ஓயாத அமளிக்கு இடையே 2ம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. 

நாடாளுமன்ற 2ம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடரில், அதானி குழும மோசடி தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி எதிர்க்கட்சிகளும், ராகுல் தனது லண்டன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்கக் கோரி பாஜ எம்பிக்களும் தொடர் அமளியில் ஈடுபட்டதால் ஒருநாள் கூட அவை முழுமையாக நடக்கவில்லை. இந்நிலையில், நேற்றும் அமளி தொடர்ந்தது. 

 2 மணிநேரம் ஒத்திவைப்பு!

இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய நாடாளுமன்ற மக்களவைக்கு பிரதமர் மோடி வருகை தந்தார். ஆனால், கடும் அமளி நீட்டித்ததால் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இரு அவைகளும் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதானி பங்குச்சந்தை முறைகேடு புகாரில் கூட்டுக்குழு விசாரணை கோரி எதிர்க்கட்சிகள், கருப்பு சட்டை அணிந்தும் பதாகைகளை ஏந்தியும், சபாநாயகர் இருக்கை முற்றுகையிட்டு, முழக்கமிட்டதன் காரணமாக, நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இன்று இறுதிநாள் என்பதால், மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கபட்டுள்ளது.

 

“மோதானி” களை அம்பலப்படுத்துவோம்

இந்த நிலையில், சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ”பட்ஜெட் தொடரின்  இரண்டாவது அமர்வு  அதானிக்காக  அமரவே இல்லாமல் முடிந்தது இன்று. நாக்பூர் தலைமையகத்தின்  நடைப்பயிற்சி நண்பருக்காக 25 நாட்கள்  நாடாளுமன்றம் நடக்காமல் பார்த்துக் கொண்ட  “அரசியல் தியாகம்” அதானிக்காக அந்நிய மண்ணில்  அனாமதேய நிறுவனங்கள்.

ஒரு வார்த்தை கூட சொல்லாத பிரதமரின் மௌனம்… விசாரிக்காதாம் நாடாளுமன்றக் குழு. ஜனநாயகம் இல்லை என்று வெளி நாட்டில் ராகுல் சொன்னாரென்று,  நாடாளுமன்றத்தில்  நாள் தோறும் நிரூபித்தனர். எதிர்க்கட்சிகள் போராடுவது  ஜனநாயகத்தை காப்பாற்ற,  ஆளும் கட்சியே  அவையை முடக்குவது  ஜனநாயகத்தை முடக்க, விவாதிக்க அஞ்சிய “மோதானி” களை மக்களிடம் அம்பலப்படுத்துவோம்” என பதிவிட்டுள்ளார்.