ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம்: ஒப்புதல் அளிக்காத கவர்னர்... காலாவதியான அவசரச்சட்டம் ...!

Governor

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து தமிழக அரசு கொண்டு வந்த அவசரச்சட்டம் கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், தற்போது அச்சட்டம் காலாவதியாகியுள்ளது. 

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பிலும் இருந்து எழுந்து வந்தன. இதையடுத்து ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்து தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்றி, கடந்த அக்டோபர் மாதம் 1-ந் தேதி கவர்னர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தது. கவர்னர் ஆர்.என்.ரவி அன்றைய தினமே பரிசீலித்து உடனடியாக ஒப்புதல் அளித்தார். 

இதனைத் தொடர்ந்து தமிழக அரசு அந்த அவசரச் சட்டத்துக்கு மாற்றாக நிரந்தர சட்டம் கொண்டு வர முடிவு செய்தது. அதன்படி, 'தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் சட்ட மசோதா 2022'-ஐ சட்டமன்றத்தில் தாக்கல் செய்து, நிறைவேற்றி, கவர்னரின் ஒப்புதலுக்காக கடந்த அக்டோபர் மாதம் 28-ந் தேதி தமிழக அரசு அனுப்பி வைத்தது. 

இந்த சட்ட மசோதாவுக்கு கவர்னர் உடனடி ஒப்புதல் தந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றுவரை தடைச்சட்ட மசோதாவுக்கு கவர்னரின் ஒப்புதல் கிடைக்கவில்லை. 

Become An Intelligent Rummy Player with 6 Tips - India CSR

இதற்கிடையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதா தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி, விளக்கங்கள் கேட்டு தமிழக அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி. கடிதம் எழுதினார். கடந்த 24-ந்தேதி காலை 11 மணியளவில் கவர்னர் மாளிகையில் இருந்து கடிதம் கிடைக்கப்பெற்ற நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்குள் தமிழக அரசு விளக்க கடிதத்தை அனுப்பி வைத்தது. 

இந்த நிலையில், கடந்த மாதம் 1-ந்தேதி கொண்டு வரப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச் சட்டம் காலாவதியாகியுள்ளது. 

அதாவது தமிழக அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச் சட்டம் கடந்த மாதம் 1-ந்தேதி கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் சட்டசபை கூடிய நாளில் இருந்து 6 வாரங்களில் அவசர சட்டம் தானாகவே காலாவதி ஆகி விடும். இதுபற்றிய விதி, அரசியல் சாசன சட்டம் பிரிவு 213 (2) (ஏ)யில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்னர், தமிழக சட்டசபை கடந்த மாதம் 17-ந் தேதி கூடியது. நேற்றுடன்(நவம்பர் 27) 6 வாரங்கள் முடிந்துவிட்டது. எனவே ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச் சட்டம் நேற்றுடன் காலாவதியாகி உள்ளது.