அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி டானியா பள்ளியில் சேர்ந்தார்..

website post - 2023-04-10T130202

அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட சிறுமி டானியா தற்போது ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பில் சேர்ந்துள்ளார்.

முகச்சிதைவு

சிறுமி டானியா திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே வீராபுரம் அரசினர் பள்ளியில் கடந்த ஆண்டு 4-ம் வகுப்பு படித்து வந்தார். மூன்றரை வயதிற்கு பிறகு டானியாவின் முகத்தில் ஒரு கரும்புள்ளி தோன்றியது. அது சாதாரணதுதான் சரியாகிவிடும் என்று நினைத்தனர் அவரின் பெற்றோர். ஆனால், அது சரியாகாத நிலையில், ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவரின் ஆலோசனையின் பேரில், கரூரில் உள்ள தோல் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தார். அவர் கொடுத்த மருந்தை உபயோகித்து வந்தநிலையில், முகத்தின் ஒரு பக்கம் சிதைய தொடங்கியது. 

சிகிச்சை

சிறுமி டானியாவின் முகத்தை சீரமைக்க மருத்துவமனையில் ரூ.40 லட்சம் வரை செலவு செய்தனர் அவரின் பெற்றோர். முகசிதைவின் காரணமாக, பள்ளிக்குச் செல்வதை நிறுத்தினார் டானியா. முகத்தை சீரமைத்தால் மட்டுமே பள்ளிக்கு செல்ல முடியும் என்று முதல்வருக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார் சிறுமி டானியா. இந்த கோரிக்கை முதல்வர் ஸ்டாலினுக்கு சென்றபிறகு, சிறுமி டானியாவிற்கு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். பின்னர், சிறுமிக்கு இலவசமாக சிகிச்சை அளிப்பதாக தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை தாமாக முன்வந்து சிகிச்சை அளித்தது. 

பள்ளியில் சேர்ந்தார்

இதனையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 06-ம் தேதி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சிறுமி டானியா. சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வு எடுத்து வந்தநிலையில், வரும் கல்வியாண்டில் பள்ளியில் சேர்வதற்காக, ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு சேர்ந்துள்ளார். வாழ்க்கையில் எத்தனையோ பேர் உடல் ரீதியிலான பாதிப்பில் தன்னம்பிக்கையை இழந்து பின்னோக்கி சென்று கொண்டிப்பவர்களுக்கு மத்தியில், தன் தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியையும் தளரவிடாமல் முன்னோக்கிய பாய்ச்சலில் 5-ம் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் சிறுமி டானியாவிற்கு This is Tamil சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.