“அரசியலமைப்பின் கூறுகளுக்கு ஆபத்து” - பினராயி விஜயன் 

Pinarayi vijayan

இந்திய அரசியலமைப்பின் கூறுகள் மற்றும் அதன் மதிப்புகளுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளார். 

1949ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி இந்திய அரசியலமைப்பு குழு அரசியலமைப்பை சட்ட வல்லுநர் அம்பேத்கர் அவர்களின் தலைமையில் உருவாக்கியது. இந்திய அரசியலமைப்பு அதிகாரப்பூர்வமாக ஜனவரி 26, 1950ம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டு, நடைமுறைக்கு வந்தது. அதையே ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினமாக நாம் கொண்டாடுகிறோம்.

அதைப்போல அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட நவம்பர் 26ம் தேதியை சட்ட நாளாக 1950ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு, இந்த நாள் அரசியலமைப்பு நாளாக கொண்டாடப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது. 

அரசியலமைப்பு நாளை முன்னிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து  தெரிவித்துள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பிற்கு மிகப்பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட 73 வது வருடத்தில் அதற்கு பல சவால்கள் சூழ்ந்துள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து அரசியலமைப்பை சூழ்ந்துள்ள ஆபத்தை முறியடிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அரசியலமைப்பின் அடிப்படை கூறுகளான ஜனநாயகம், கூட்டாட்சி மற்றும் மதசார்பற்ற தன்மை ஆகியவற்றிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், ஒன்றிய அரசின் முடிவுகளில் மாநில அரசுகளுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.