ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் - விளக்கம் கேட்டு ஆளுநர் கடிதம்

Rummy RN Ravi

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவிற்கு விளக்கம் கேட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடைவிதித்து கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது. அவசர சட்டத்திற்கு ஆளுநர் ரவியும் அன்று மாலையே ஒப்புதல் வழங்கினார். 

தமிழ்நாடு அரசு சார்பில் நிறைவேற்றப்பட்ட அவசர சட்டத்திற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்து இருந்தாலும், அது நடைமுறைக்கு வரும் தேதி அறிவிக்கப்படவில்லை. அவசர சட்டம் நடைமுறைக்கு வரும் தேதி அறிவிக்கப்படாததால், சட்டம் நடைமுறைக்கு வரவில்லை.

இந்நிலையில் ஆன்லைன் ரம்மியை நிரந்தரமாக தடை செய்யும் வகையில் முழுமையான சட்டமாக நிறைவேற்றி நடைமுறைக்கு கொண்டு வர ஆளுநரின் ஒப்புதல் கேட்டு தமிழ்நாடு அரசு சட்ட மசோதாவை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைத்திருந்தது. இந்த சட்டத்துக்கு விளக்கம் கேட்டு ஆளுநர் ரவி, தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

இதற்கான விளக்கத்தை கேட்டு, ஆளுநர் அனுப்பியுள்ள கடிதத்திற்கு இன்று விளக்கம் அளிக்குப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மேலும் அவசர சட்டத்தில் இருந்த ஷரத்துகளே இந்த சட்டத்திலும் உள்ளதால் ஆளுஎநர் இதற்கு ஒப்புதல் வழங்குவார் என தெரிவித்துள்ளார்.