என்ன நடக்கிறது நாடாளுமன்றத்தில்.. தொடர்ந்து நான்கு நாட்கள் முடங்கியதன் பின்னணி என்ன.?

website post - 2023-03-16T143122

அமளிக்கான காரணம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு தொடங்கியது முதலே இரு சபைகளின் நடவடிக்கைகளும் முடங்கி உள்ளன. ஆளும் பாஜகவைப் பொறுத்தவரையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் லண்டன் பேச்சை கையில் எடுத்துள்ளது. அதேபோல், எதிர்க்கட்சியினர் அதானி விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. 

அதானிக்கும் பிரதமருக்கும் தொடர்பு

கடந்த பிப்-7ம் தேதி நடந்த மக்களவையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், அதானிக்கும் பிரதமருக்கும் தொடர்பிருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். அதானி சொத்துக்களை குவிப்பதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டிற்கும் எதிராக செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, உண்மை வெளிவரும் வரை  கவுதம் அதானி குறித்து தனது கட்சி தொடர்ந்து கேள்விகளை எழுப்பும் என்றும், அதானிக்கும் பிரதமருக்கும் உள்ள தொடர்பு குறித்து நாங்கள் நாடாளுமன்றத்தில் கேட்டபோது, ​​எங்களின் முழுப் பேச்சும் நீக்கப்பட்டது. அதானி குறித்து உண்மை வெளிவரும் வரை ஆயிரக்கணக்கான முறை நாடாளுமன்றத்தில் கேட்போம், நாங்கள் நிறுத்த மாட்டோம் என்று மக்களவையில் பேசியிருந்தார்.

அதானி கடன் விவரங்களை வெளியிட முடியாது

இந்நிலையில், (மார்ச்-13) அன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு துவங்கியது. அன்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் காங்.எம்.பி. தீபக் பாய்ஜ், அதானி நிறுவன கடன் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) சட்டப்படி, எந்தவொரு நிறுவனத்தின் கடன் விவரங்களையும் வெளியிட முடியாது என எழுத்துப்பூர்வமாக பதிலளித்திருந்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 

மேலும், அன்றைய கூட்டத்தொடரின் போது, காங். எம்.பி. ராகுல் காந்தி லண்டனில் இந்திய ஜனநாயகம் பற்றி தவறாக பேசியதாகவும், அதற்காக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். இதற்கு காங். எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபட்டதையடுத்து அன்றைய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடங்கியது.

இரண்டாவது நாள்

இரண்டாவது நாள் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வில் அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் அறிக்கை, பணவீக்கம் உயர்வு, சமையல் காஸ் விலை உயர்வு, வேலையின்மை விகிதம் அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. அதேநேரம், பிரிட்டன் சென்றிருந்த ராகுல் காந்தி, சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தது குறித்து பிரச்சினை எழுப்ப ஆளும் கட்சி திட்டமிட்டிருந்தது. ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதையடுத்து அன்றைய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடங்கியது.

மூன்றாவது நாள்

மூன்றாவது நாள் அவை நடவடிக்கைகள் தொடங்கியதும், ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் கோஷங்கள் எழுப்பினர். அதற்கு பதிலளிக்கும் விதமாக அதானி விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டனர். இந்த அமளியால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இன்றும் முடங்கியது

இந்த நிலையில், இன்று (மார்ச்-16) 4-வது நாளாக நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் முடங்கியது. இன்று காலை சபை தொடங்கியதும் அமளி தொடர்ந்ததால் சபை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. ஆளும் கட்சி எம்பிக்கள், ராகுல் காந்தி விவகாரத்தை கையில் எடுத்து முழக்கமிட்டன்ர். எதிர்க்கட்சியினரோ அதானி விவகாரத்தில் கோஷம் எழுப்பினர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் இன்றும் முடங்கியுள்ளது.

மனித சங்கிலி போராட்டம்

இன்றைய நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கிய நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதானி குழும விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை என எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு ஏப்ரல் மாதம் வரை நடைபெறவுள்ளநிலையில், இப்போதிருந்தே ஆளும் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் அமளியில் ஈடுபட்டு வருவது மக்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.