சனாதன விவகாரம்.. பாஜகவினர் மனு.. அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு பதவிக்கு ஆபத்தா.? 

dxfnjg

தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு ஆகியோரது பதவிகளை பறிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் தமிழ்நாடு பாஜகவினர் மனு அளித்துள்ளனர்.

சனாதன ஒழிப்பு மாநாடு

சனாதனம் பற்றியான பேச்சு கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. முன்னதாக, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெங்கு, கொரோனாவை எப்படி ஒழிக்க வேண்டுமோ அதேபோல்தான், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கடந்த ஆக-2-ம் தேதி சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசியிருந்தார். அந்த மாநாட்டில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவும் கலந்து கொண்டார். 

திரித்து பொய் செய்தி

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு பாஜகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், தனது கருத்தை திரித்து பொய் செய்தி வெளியிட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதே கருத்தை முதலமைச்சர் ஸ்டாலினும் தெரிவித்திருந்தார்.    

பாஜகவினர் மனு

இந்தநிலையில், தமிழக பாஜக தலைவர்கள் இன்று ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்தனர். அப்போது, சனாதனத்திற்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு ஆகியோரை பதவியில் இருந்து நீக்கக்கோரி மனு அளித்துள்ளனர். 

அந்த மனுவில் "சனாதன எதிர்ப்பு குறித்து அமைச்சர் உதயநிதி பேசியதும், அதே மேடையில் அமைச்சர் சேகர் பாபு அமர்ந்திருப்பதும் பதவி ஏற்கும் பொழுது எடுத்த உறுதி மொழிக்கு எதிரானது. இருவரையும் அமைச்சர் பதவியில் இருந்து சட்ட ரீதியாக நீக்கம் செய்ய வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.