ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது - மத்திய அரசு.!

wer

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக அரசியல் போராட்டம்

தமிழக அரசியலில் மக்களுக்கான தேவையை நிறைவேற்றுவதைவிட, தேவையற்ற களைய வேண்டிய பிணிகளை துரத்தி எரிந்து தான் வருகிறது.  அதற்கான முன்னெடுப்புகளை அரசுகள் எடுத்து தான் வருகிறது. குறிப்பாக, இந்தி எதிர்ப்பு போராட்டம், கள்ளுக்கடை உடைப்பு, மது ஒழிப்பு, முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டம், நீட், நில அபகரிப்பிற்கு எதிரான போராட்டம் என தற்போது வரை களையப்பட வேண்டியவற்றை அரசுகள் களைந்து தான் வருகிறது. அந்த வகையில், உயிரை குடித்துக் கொண்டிருக்கும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான போராட்டம் நீண்டு வந்தாலும் அதற்கான முடிவை இன்னும் எட்டவில்லை என்றுதான் சொல்ல முடியும்.

செவியில் கேட்டது அதிசயம்

தற்போதைய காலகட்டத்தில் நீட், மதுவிலக்கு போன்றவைகளுக்கு எழுப்பப்படும் கேள்விகளும், போராட்டங்களும் முன்னெடுத்து வந்தாலும், ஆன்லைன் சூதாட்டத்தால் இழக்கும் ஒவ்வொரு உயிருக்கும் அவ்வப்போது, சூதாட்டத்திற்கு எதிரான போராட்டங்களும், கண்டனக் குரல்களும் ஒலித்து வருகிறது. பலநாள் சட்டப்போராட்டம் செய்தபோதும், மசோதாவின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டிருந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இழக்கும் உயிர்களுக்கான மதிப்பை மதிப்பிடாமல் இருந்து வந்தார். இவைகளுக்கு எதிராக எத்தனை முறை மசோதாக்கள் நிறைவேற்றம், இவைகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகள் என அப்போதெல்லாம் கேட்காத செவிகளுக்கு, இப்போது அவர்களின் செவியில் கேட்டிருப்பது அதிசயம்.

அதிகாரம் உள்ளது

மக்களவையில் எம்.பி பார்த்திபன் அவர்கள் ஆன்லைன் சூதாட்டம் குறித்து எழுப்பிய கேள்விக்கு மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், சூதாட்டங்களை தங்களது வரம்பிற்கு கொண்டு வர தேவையான சட்டங்கள் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. பந்தயம், சூதாட்டம் இரண்டும் அரசமைப்பின் ஏழாவது அட்டவணையின் கீழ் வருகிறது என விளக்கமளித்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை எனக்கூறி தமிழ்நாடு அரசின் மசோதாவை திருப்பி அனுப்பி, காலம் தாழ்த்தி வந்த நிலையில், தற்போது மத்திய அமைச்சரின் இந்த விளக்கம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.